தமிழகத்தில் பல்லுயிர் பெருக்க சட்டத்தை அமல்படுத்த மேலாண்மை குழுக்கள் அமைக்கக்கோரி வழக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் பல்லுயிர் பெருக்க மேலாண்மை குழுக்களை அமைக்கக்கோரிய வழக்கில் அதிகாரிகள் நடவடிக்கை;
மதுரை,
பல்லுயிர் பெருக்க சட்டம்மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த தனசேகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
நம் நாட்டில் இயற்கை வளம், பாரம்பரிய உயிரினங்கள், தாவரங்கள் போன்றவற்றை பாதுகாக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட பல்லுயிர் பெருக்க சட்டம் கடந்த 2002–ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தை அமல்படுத்த தேசிய அளவில் பல்லுயிர் பெருக்க ஆணையமும், மாநில அளவில் மாநில பல்லுயிர் பரவல் வாரியமும், உள்ளாட்சி அமைப்புகளில் பல்லுயிர் மேலாண்மை குழுவும் அமைக்கப்பட வேண்டும்.
இந்த சட்டத்தின்படி இயற்கை வளங்களை பாதுகாக்க கர்நாடகாவில் 5,000 பல்லுயிர் மேலாண்மை குழுக்களும், கேரளாவில் 2,000 குழுக்களும் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த மாநிலங்களில் பல்லுயிர் பரவல் பதிவேடுகளும் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் இதுவரை 16 குழுக்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
நடைமுறைப்படுத்த வேண்டும்நாட்டிலேயே பல்லுயிர் பெருக்கத்தில் தமிழகம் முக்கிய இடத்தை கொண்டுள்ளது. இங்கு 15 விலங்குகள் சரணாலயங்கள், 15 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள், 4 புலிகள் காப்பகங்கள், 4 யானைகள் சரணாலயங்கள், 4 உயிர்க்கோள காப்பகங்கள், 2 வன உயிர் காப்பகங்கள் உள்ளன.
தமிழக கிராமங்களில் கால்நடைகள், நாட்டு இன பயிர் முறைகள், விதைகள், மருத்துவ குணமுடைய தாவரங்கள் மிகுந்து காணப்படுகின்றன. எனவே பல்லுயிர் பெருக்க சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
அதிகாரிகளுக்கு உத்தரவுஇந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இல்லாததால் பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படவில்லை‘ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆஜராகி, “பல்லுயிர் பெருக்க சட்டம் அமல்படுத்தப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க மேலாண்மை குழுக்கள் அமைக்கப்படவில்லை. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாவிட்டாலும் அதிகாரிகளை வைத்து இந்த குழுக்களை அமைக்கலாம்“ என்றார்.
விசாரணை முடிவில், ‘பல்லுயிர் பெருக்க சட்டப்படி தமிழகத்தில் உள்ளாட்சி அளவில் இதுதொடர்பான குழுக்கள் அமைக்க மத்திய–மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர்கள், பல்லுயிர் பெருக்க ஆணைய உறுப்பினர்–செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.