பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 7,064 பேர் எழுதினார்கள் தமிழ் முதல் தாள் எளிதாக இருந்ததாக பேட்டி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 7,064 பேர் எழுதினார்கள்.

Update: 2017-03-02 23:30 GMT

பொள்ளாச்சி,

பிளஸ்–2 தேர்வு

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட மொத்தம் 71 பள்ளிகள் உள்ளன.

தனித்தேர்வர்கள் உள்பட மாணவர்கள் 3 ஆயிரத்து 213 பேரும், மாணவிகள் 3 ஆயிரத்து 955 பேரும் சேர்த்து 7,168 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாணவர்கள் 3 ஆயிரத்து 168 பேரும், மாணவிகள் 3 ஆயிரத்து 896 பேரும் சேர்த்து 7064 பேர் தேர்வு எழுதினார்கள். 104 பேர் தேர்வு எழுத வரவில்லை.

போலீஸ் பாதுகாப்பு

மாணவ–மாணவிகள் தேர்வு எழுத வசதியாக 23 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனித்தேர்வர்கள் பிளஸ்–2 தேர்வு எழுத வித்ய நேத்ரா பள்ளியில் தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.வினாத்தாள்கள் வைக்கப்பட்டு இருந்த மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு வழித்தட அலுவலர்கள் எடுத்து சென்றனர். தேர்வு எழுவதுவதற்கு முன் பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிரார்த்தனை செய்தனர்.

தேர்வர்களை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 23 பேரும், அறை கண்காணிப்பாளர்கள் 356 பேரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதை தவிர தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 50 பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. பறக்கும்படையினர் அவ்வப்போது ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சோதனை செய்தனர்.

கல்வி அதிகாரி ஆய்வு

இது தவிர அந்தந்த தேர்வு மையங்களில் நிலையான பறக்கும்படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையத்திற்கு வெளியே தேர்வில் காப்பி அடித்தால் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வு மையத்திற்கு செல்போன் கொண்டு வர கூடாது என்பது போன்ற அறிவுரைகள் கொண்ட வாசகங்கள் ஒட்டப்பட்டு இருந்தது. தேர்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் மற்றும் மாணவ–மாணவிகள் எழுதுவதை கோவை மாவட்ட எஸ்.எஸ்.ஐ. இணை இயக்குனர் ஆனந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரி நாசுருதீன் மற்றும் கல்வி அதிகாரிகள் உடன் சென்றனர்.

மாணவ–மாணவிகள் மகிழ்ச்சி

பிளஸ்–2 தேர்வு எழுதி விட்டு தேர்வு மையத்தை விட்டு வெளியே மாணவ–மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தேர்வு எழுதியதை பகிர்ந்துகொண்டனர். பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதி விட்டு வந்த ரம்யா தேவி என்ற மாணவி கூறியதாவது:–

தேர்வு மையத்திற்கு செல்லும் முன் ஒருவித பயம் இருந்தது. வினாத்தாள் எப்படி இருக்குமோ? என்று நினைத்தோம். ஆனால் அனைத்து கேள்விகளும் மிகவும் எளிதாக இருந்தது. ஏற்கனவே காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கேட்கப்பட்டு இருந்த கேள்விகள் அதிகம் இருந்தன. 95 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்வு எளிதாக இருந்தது

மாணவி அகல்யா கூறியதாவது:–

பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகள் மட்டும் இருந்ததால், அனைத்து கேள்விக்களுக்கும் விடை அளிக்க முடிந்தது. ஏற்கனவே பள்ளியில் ஆசிரியர்கள் நடத்திய மாதிரி தேர்வுகளில் இருந்தும் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. 8 மதிப்பெண் வினாக்கள் உள்பட அனைத்து வினாக்களுக்கும் எளிதாக இருந்தது. இதுபோன்று மற்ற அனைத்து தேர்வுகளும் எளிதாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த 32 தேர்வு அறைகளில் 635 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினார்கள். இதே தேர்வு மையத்தில் முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிட்ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ–மாணவிகளும் பிளஸ்–2 தேர்வை எழுதினார்கள்.

முன்னதாக கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 தேர்வு எழுத வந்த மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி பள்ளி வளாகத்தில் பிரார்த்தனை செய்தனர்.

வால்பாறை

வால்பாறை பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகள், 5 அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 713 மாணவ,மாணவிகள் 2 மையங்களில் பிளஸ்–2 தேர்வு எழுதினார்கள். இதில் வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி மகேஸ்வரி ஆசிரியை ஒருவர் உதவியுடன் தேர்வு கண்காணிப்பாளர் முன்னிலையில் தனி அறையில் தேர்வு எழுதினார். கிணத்துக்கடவில் ஒரு மாற்றுத்திறனாளியும், பொள்ளாச்சியில் 3 மாற்றுத்திறனாளிகளும் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார்கள்.

மேலும் செய்திகள்