3½ லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கலெக்டர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டத்தில் 3½ லட்சம் மாடுகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் ராஜேஷ் தொடங்கி வைத்தார்.;
கடலூர்,
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்அனைத்து வகை மாடுகளுக்கான 12–வது சுற்று தீவிர கோமாரிநோய் தடுப்பூசி முகாம் மார்ச் 1–ந் தேதி தொடங்கி 21–ந் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 3½ லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜேஷ் தலைமை தாங்கி கறவை பசுக்கள் மற்றும் சினையுறா பசுக்களுக்கு அரசால் வழங்கப்படும் மினரல் மிக்சர் பாக்கெட்டை வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் பாதிரிக்குப்பம், கே.என்.பேட்டை, குமாரப்பேட்டை, அரிசி பெரியாங்குப்பம், கன்னிமாநகர் பகுதிகளை சேர்ந்த கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி போடப்பட்டன.
60 மருத்துவ குழுக்கள்இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக கிராமங்கள் தோறும் சென்று மாடுகளுக்கு தடுப்பூசி போட கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோரை கொண்ட 60 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசியானது சினைமாடுகள், கறவை மாடுகள் உள்பட அனைத்து வகை மாடுகளுக்கும், 3 மாத வயதுக்கு மேற்பட்ட கன்றுகளுக்கும் இலவசமாக போடப்பட இருப்பதாக தெரிவித்தார்.
முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் மோகன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராகவன், கடலூர் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் மோகன், டாக்டர் சுரேஷ், உதவி மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள், கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.