மாவட்டத்தில் 25 ஆயிரத்து 607 பேர் பிளஸ்–2 தேர்வு எழுதினர்

விருதுநகர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 607 பேர் பிளஸ்–2 தேர்வு எழுதினர்.

Update: 2017-03-02 22:45 GMT

விருதுநகர்,

பிளஸ்–2 தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்–2 பொதுத் தேர்வு நேற்று 76 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வினை 11 ஆயிரத்து 463 மாணவர்களும், 13 ஆயிரத்து 733 மாணவிகளும் எழுதினர். தனித் தேர்வர்களாக 239 மாணவர்களும் 172 மாணவிகளும் தேர்வு எழுதினர். மொத்தம் 25 ஆயிரத்து 607 பேர் தேர்வு எழுதினர்.

விருதுநகர் கே.வி.எஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் சிவஞானம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பிளஸ்–2 பொதுத் தேர்விற்கு விருதுநகர் மாவட்டத்தில் 76 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 76 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 400 தேர்வர்களுக்கு மேல் உள்ள 24 தேர்வு மையங்களுக்கு 24 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 24 கூடுதல் துறை அலுவலர்களும், 1,345 அறைக் கண்காணிப்பாளர்களும், இதர அலுவலகப் பணியாளர்களும் தேர்வுப் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பறக்கும் படையினர்

தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள வயது வந்தோர் கல்வி மற்றும் பள்ளி சாரா கல்வி இயக்ககத்தின் இணை இயக்குனர் செல்வக்குமார் மற்றும் 6 ஆய்வு அலுவலர்களும், தலா 3 பேர் வீதம் 18 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு தேர்வினை கண்காணித்து வருகின்றனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக போதிய இருக்கை வசதிகளும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் 41 பேர் தேர்வெழுதுகின்றனர். அவர்களில் கண்பார்வை குறைபாடு மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடு உடைய 22 பேருக்கு, அவர்கள் சொல்வதை எழுத உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுழற்சி முறையில் பாதுகாப்பு

தேர்வு மையங்களாக செயல்படாத ஏனைய பிற பள்ளிகளில் பணிபுரியும் காவலர், இரவுக் காவலர்கள், அலுவலகப் பணியாளர்களை தேர்வு மையங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவல் புரியவும், விடுமுறை நாட்களில் தேர்வு மையங்களில் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பார்வையிடவும், ஆய்வு அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களும் அவ்வப்போது தேர்வு மையங்களை பார்வையிட்டு பாதுகாப்பினை உறுதி செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களுக்கும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர்(விருதுநகர்) பாண்டியராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்