தானேயில் ரூ.1½ கோடி பழைய நோட்டுகளுடன் 2 பேர் கைது
தானேயில் ரூ.1½ கோடி பழைய நோட்டுகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தானே,
தானேயில் ரூ.1½ கோடி பழைய நோட்டுகளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.1½ கோடி பறிமுதல்தானே, டேம்பிநாக்கா பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே சிலர் அதிகளவு தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுடன் வர உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது காரில் 2 பெரிய பைகள் இருந்தன. அந்த பைகளை போலீசார் திறந்து பார்த்தபோது அதில், கட்டுக்கட்டாக பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் இருந்தன.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் பணத்துடன் அந்த பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.1 கோடியே 29 லட்சம் இருந்தது.
விசாரணைபோலீஸ் விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் பவாய் பகுதியை சேர்ந்த கிஷோர்(வயது25), நவிமும்பையை சேர்ந்த வினோத்(42) என்பது தெரியவந்தது. இவர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தொழில் அதிபர் ஒருவருக்காக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிடிபட்ட 2 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தானேயில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் ரூ.96 லட்சம் தடைசெய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுடன் 4 பேர் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.