மும்பை மாநகராட்சி மேயர் தேர்தல் 8–ந் தேதி நடக்கிறது கமி‌ஷனர் அஜாய் மேத்தா அறிவிப்பு

மும்பை மாநகராட்சி மேயர் தேர்தல் 8–ந் தேதி நடைபெறும் என கமி‌ஷனர் அஜாய் மேத்தா அறிவித்துள்ளார்.

Update: 2017-03-01 21:55 GMT

மும்பை,

மும்பை மாநகராட்சி மேயர் தேர்தல் 8–ந் தேதி நடைபெறும் என கமி‌ஷனர் அஜாய் மேத்தா அறிவித்துள்ளார்.

மாநகராட்சி தேர்தல்

நாட்டின் பணக்கார மும்பை மாநகராட்சியின் தேர்தல் கடந்த 21–ந் தேதி நடந்தது. முன்எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலை சிவசேனா, பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து சந்தித்தன. அனைத்து கட்சியினரின் அனல் பறந்த பிரசாரத்திற்கு பிறகு வாக்கு எண்ணிக்கை 23–ந் தேதி நடந்தது. இதில் 227 வார்டுகளுக்கு நடந்த இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக சிவசேனா 84 வார்டுகளில் வெற்றி பெற்றது. அவர்களிடம் இருந்து பிரிந்து தனித்து களத்தில் குதித்த பா.ஜனதா 82 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 31, தேசியவாத காங்கிரஸ் 11, நவநிர்மாண்சேனா 7, சமாஜ்வாடி கட்சி 6, எம்.ஐ.எம். 2, மற்ற வார்டுகளில் சுயேட்சையும் வெற்றி பெற்று இருந்தன.

யாருக்கு மேயர் பதவி?

யாருக்கும் தனிப்பெரும்பான்னை கிடைக்காததால் மாநகராட்சி மேயர் பதவியை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களை கைப்பற்றிய சிவசேனா தான் மேயர் பதவியை கைப்பற்றும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த கட்சி தங்களுக்கு 6 சுயேட்சைகளின் ஆதரவு இருப்பதாக ஏற்கனவே அறிவித்து உள்ளது. இதன் மூலம் அவர்களின் பலம் 90 ஆக உயர்ந்துள்ளது. இதுபோக நவநிர்மாண்சேனாவும், சிவசேனாவிற்கு ஆதரவாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிவசேனா கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் ஆதரவுடன் மேயர் பதவியை பிடிக்குமா அல்லது பிரிந்து சென்ற பா.ஜனதாவுடன் சேர்ந்து கொள்ளுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. சிவசேனா கட்சி தொடர்ந்து பா.ஜனதா கட்சியை விமர்சித்து வருகிறது. ஆனால் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பா.ஜனதா மேயர் பதவியை கைப்பற்றும் என அக்கட்சி தலைவர்கள் ஒருவர் கூட சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8–ந் தேதி தேர்தல்

மும்பை மாநகராட்சி மேயருக்கான தேர்தல் நடைமுறைப்படி 8–ந் தேதி நடைபெற வேண்டும். இந்தநிலையில் தேர்தலை 9–ந் தேதி நடத்த வேண்டும் என நேற்று அணில் தேசாய் எம்.பி., ராகுல் செவாலே எம்.பி. ஆகியோர் தலைமையில் சிவசேனா கட்சி பிரதிநிதிகள் மும்பை மாநகராட்சி ஆணையர் அஜாய் மேத்தாவை சந்தித்து முறையிட்டனர்.

இதையடுத்து ஆசிஸ் செலார் எம்.எல்.ஏ., மனோஜ் காடக் உள்ளிட்ட பா.ஜனதா பிரதிநிதிகளும் ஆணையரை சந்தித்து பேசினர். அப்போது அவர் மேயர் தேர்தல் 8–ந் தேதியே நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.

இந்தநிலையில் மாநகராட்சி ஆணையர் வரும் 8–ந் தேதி மும்பை மேயர், துணை மேயருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். மேயர், துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிட விரும்பும் கட்சியினர் 4–ந் தேதி மனு தாக்கல் செய்ய வேண்டும்.

சிவசேனா அதிருப்தி

இந்தநிலையில் தங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து சிவசேனாவின் ராகுல் செவாலே எம்.பி. கூறியதாவது:– 8–ந் தேதி கடந்த முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி காலம் முடிய உள்ளவர்களும் அலுவலக பணிக்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு வருவார்கள். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்களும் வருவார்கள். இதனால் குழப்பம் ஏற்படும். எனவே தான் 9–ந் தேதி மேயர் தேர்தலை நடத்த வலியுறுத்தினோம். பா.ஜனதாவின் கட்டாயத்தால் தான் ஆணையர் இந்த முடிவை அறிவித்துள்ளார். இந்த முடிவு சரியானது அல்ல. ஒரு தலை பட்சமாக மாநகராட்சி ஆணையர் நடந்து கொண்டது அதிருப்தி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்