கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Update: 2017-03-01 22:15 GMT

புதுச்சேரி,

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினார்கள்.

சாம்பல் புதன்

எருசலேம் பெத்லகேமில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இறைப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு ஏசு 40 நாட்கள் உபவாசம் இருந்தார்.

அதை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாச நிலையை கடைபிடிக்கின்றனர். இந்த 40 நாட்களை லெந்து நாட்கள் அல்லது கஸ்தி நாட்கள் அல்லது தவக்காலம் என்று குறிப்பிடுகின்றனர். தவக்காலம் தொடங்கும் நாள்தான் சாம்பல் புதன்கிழமையாகும்.

இந்த 40 நாட்களின் இறுதியில் வரும் வெள்ளிக்கிழமையை ‘புனிதவெள்ளி’ என்று கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர். புனித வெள்ளிக்கிழமைக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையை, ஏசு உயிர்த்தெழுந்த நாளாக, அதாவது ‘ஈஸ்டர்’ பண்டிகையாக மகிழ்ச்சியுடன் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

தவக்காலமான 40 நாட்களில் பக்தர்கள் கடைப்பிடித்து வந்த கட்டுப்பாடுகள், ‘ஈஸ்டர்’ தினத்தோடு நிறைவடைகிறது. எனவே, உணவுக் கட்டுபாடுகளை விடுத்துவிட்டு, ‘ஈஸ்டர்’ தினத்தன்று விருந்து உணவை கிறிஸ்தவர்கள் சாப்பிடுவது வழக்கமாக உள்ளது.

சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையான நேற்று தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.

இதில் கலந்துகொண்டவர்களுக்கு பாதிரியார்கள் சாம்பல் கொண்டு நெற்றியில் சிலுவை அடையாளமிட்டனர். இந்த தவக்காலத்தின்போது கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொள்வார்கள்.

வருகிற ஏப்ரல் மாதம் 16–ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய ஞாயிறு (ஏப்ரல் 9–ந்தேதி) குருத்தோலை ஞாயிறாக கொண்டாடப்பட உள்ளது.

மேலும் செய்திகள்