மரக்காணத்தில் சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மரக்காணத்தில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.;
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் மரக்காணம் – திண்டிவனம் மற்றும் புதுச்சேரி – மரக்காணம் சாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் புதுச்சேரி – மரக்காணம் சாலையில் இருந்து திண்டிவனம் சாலை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக சாலையின் இருபக்கமும் இருந்த மரங்கள் கடந்த மாதம் வெட்டி அகற்றப்பட்டன.
இந்நிலையில் விரிவாக்க பணிக்காக சாலையோரம் ஆக்கிரமித்துள்ள வீடு, கடைகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து ஒரு சிலர் தங்களது ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றிக் கொண்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்இந்த நிலையில் அகற்றபடாமல் இருந்த கட்டிடம், சுற்றுச்சுவர் போன்ற ஆக்கிரமிப்பு பகுதிகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன. மரக்காணம் தாசில்தார் மனோகரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் நாகராஜ், உதவி பொறியாளர் மகேஷ், சாலை ஆய்வாளர் தணிகைவேல் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் சாலையோர பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.