நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பயங்கரம் துணியால் கழுத்தை இறுக்கி 4 மாத கர்ப்பிணி கொலை கணவர் கைது

பெங்களூருவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் துணியால் கழுத்தை இறுக்கி 4 மாத கர்ப்பிணி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

Update: 2017-03-01 21:04 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் துணியால் கழுத்தை இறுக்கி 4 மாத கர்ப்பிணி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

4 மாத கர்ப்பிணி

பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வருபவர் இம்ரான் பாட்ஷா. கார் டிரைவர். இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. தற்போது ஷில்பா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இம்ரானுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்ததாகவும், தினமும் அவர் குடிபோதையில் ஷில்பாவுடன் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஷில்பாவின் நடத்தையில் இம்ரான் சந்தேகப்பட்டதுடன், அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை யார்? என்று கேட்டு தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இம்ரானுக்கும், ஷில்பாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அதுபோல, நேற்று முன்தினம் இரவும் ஷில்பாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு இம்ரான் சண்டை போட்டுள்ளார்.

கொலை

அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த இம்ரான், ஷில்பாவை அடித்து, தாக்கியதுடன், அவரது கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு, அங்கிருந்து இம்ரான் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கெங்கேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். போலீசார் விரைந்து வந்து கொலையான ஷில்பாவின் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள்.

அப்போது ஷில்பாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு இம்ரான் சண்டை போட்டதுடன், அவரது கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இம்ரானை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கழுத்தை துணியால் இறுக்கி 4 மாத கர்ப்பிணி கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்