வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டோர் விரைவில் நிவாரணம் பெற ஆன்லைனில் வழக்கு ஆவணங்களை பதிவேற்றம்

வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டோர் விரைவில் நிவாரணம் பெற ஆன்லைனில் வழக்கு ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் தொடங்கி வைத்தார்.;

Update: 2017-03-01 23:00 GMT
நாகர்கோவில்,


வாகன விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாகன விபத்து வழக்குகள் சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் திட்டம் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல் குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள போக்குவரத்து புலனாய்வுப்பிரிவில் வாகன விபத்து வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் குத்துவிளக்கேற்றி வைத்தும், நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு குற்ற எண் 11 வழக்கின் அனைத்து ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோட்டார் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சி.சி.டி.என்.எஸ். பிரிவு சப்–இன்ஸ்பெக்டர்கள் வெர்ஜின் சாவியோ, பத்மகுமாரி, வேணுகுமார், போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் ஞானதாஸ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சசிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–

1¼ லட்சம் வழக்குகள் பதிவு


குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் (சி.சி.டி.என்.எஸ்.) முறை மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் இதர பிரிவுகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் 1980–ம் ஆண்டு முதல் 2010–ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட முக்கியமான வழக்குகளும், 2011 முதல் இன்று வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை குமரி மாவட்டத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 798 வழக்குகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் தங்களுடைய போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்குகளின் விவரங்களை www/eservices.tnpolice.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட “யூசர்நேம் பாஸ்வேர்டு“ கொடுத்து பார்த்துக் கொள்ளலாம். மேலும் தங்களுடைய செல்போனில் உள்ள மொபைல் அப்ளிகேசன் மூலமாகவும் பார்த்துக் கொள்ளலாம். பொதுமக்களும் மேற்கண்ட இணையதளம் மூலம் தங்களது ஆன்லைன் புகார், முதல் தகவல் அறிக்கை, புகார் மனுக்களின் அப்போதைய நிலவரம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும் புகார்தாரரின் செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியும் (மெசேஜ்) அனுப்பப்படும்.

ஆன்லைனில் பதிவேற்றம்


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15–ந் தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி போலீஸ் நிலையத்தில் அன்றாடம் பதிவு செய்யப்படும் வழக்குகள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கோர்ட்டுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் போலீஸ் பயன்பாட்டுக்காக மின் அஞ்சல் சேவை தொடங்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி வழக்குகள் சம்பந்தமாக இறுதி அறிக்கையை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கோர்ட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 6–ந் தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி கம்ப்யூட்டர் வழியாக கைது படிவம், பிணையப்பத்திரம், கைதி குறிப்பாணை, காவல் அடைப்பு அறிக்கை தயார் செய்து கோர்ட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இன்று (நேற்று) முதல் வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாகன விபத்து வழக்குகள் சம்பந்தமாக அனைத்து ஆவணங்களையும் சி.சி.டி.என்.எஸ். திட்டத்தின் சிப்ரஸ் மென்பொருள் வாயிலாக முதல் தகவல் அறிக்கை, பார்வை மகஜர், மாதிரி வரைபடம், வாகன பதிவுச்சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், வாகன அனுமதி சான்றிதழ், வாகன காப்பீட்டு சான்றிதழ், இறுதி அறிக்கை, மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் சிகிச்சை சான்றிதழ்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

353 புகார்கள்


வருகிற ஏப்ரல் மாதம் 1–ந் தேதி முதல் பதிவேற்றம் செய்யப்பட்ட வாகன விபத்து வழக்கு ஆவணங்களை ஆன்லைன் மூலம் காப்பீட்டு அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்கு நடைபெறும் கோர்ட்டுகள் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட இருக்கின்றது. மேலும் தேவையான ஆவணங்களை அதற்கான கட்டணங்களை செலுத்தி இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம். இதேபோல் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வாகன விபத்து வழக்குகளின் ஆவணங்கள் ஆன்லைன் முறையில் இன்று (நேற்று) முதல் பதிவேற்றம் செய்யப்படும்.

கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் ஆன்லைன் முறையில் மட்டும் 353 புகார்கள் வந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை 80 புகார்கள் வந்துள்ளன. இதேபோல் வாட்ஸ் அப் மூலமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன்மூலம் நல்ல பயன் கிடைத்துள்ளது. விபத்துகளின் எண்ணிக்கையும், விபத்துகளினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன.

36 ஆயிரம் வழக்கு


கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்த வாகன விபத்துகளினால் 28 பேர் இறந்துள்ளனர். பிப்ரவரி மாதம் வாகன விபத்துகளினால் 16 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வாகன விபத்துகளினால் 17 பேர் இறந்துள்ளனர். பிப்ரவரி மாதம் 14 பேர் இறந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 26,313 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 36,089 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 100 சதவீதம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் உள்ள மாவட்டம் என்ற நிலையை உருவாக்க மாவட்ட மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிலர் ஹெல்மெட் வைத்திருந்தும் அதை அணியாமல் தொங்கவிட்டோ, பின்னால் இருப்பவரை வைத்திருக்கச்சொல்லியோ வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் மீதும் இனிமேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் கூறினார்.

மேலும் செய்திகள்