ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை வனத்துறையினர் விசாரணை

ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-03-01 23:00 GMT
தர்மபுரி,


தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே பண்ணப்பட்டி வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று நேற்று இறந்து கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட வன அலுவலர் திருமால், உதவி வன அலுவலர் பிரியதர்ஷினி, கால்நடை டாக்டர் பிரகாஷ், ஒகேனக்கல் வனச்சரகர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் இறந்த யானையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து யானைக்கு அதே பகுதியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் யானையின் உடல் அதே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

வனத்துறையினர் விசாரணை


நோய்த்தொற்று மற்றும் ரத்த போக்கு காரணமாக இந்த பெண் யானை இறந்திருக்கலாம் என்று முதல் கட்ட ஆய்வில் தெரியவந்தது. இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்