தென்பெண்ணை ஆற்றுநீரை 5 ஊராட்சிகளின் ஏரிகளுக்கு திருப்பி விடக்கோரி கிராம மக்கள் போராட்டம்

உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றுநீரை 5 ஊராட்சிகளின் ஏரிகளுக்கு திருப்பி விடக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2017-03-01 23:00 GMT
ராயக்கோட்டை,


உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றுநீரை 5 ஊராட்சிகளின் ஏரிகளுக்கு திருப்பி விடக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிராம மக்கள் போராட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி, கொம்மேபள்ளி, பீர்ஜேபள்ளி, துப்புகானப்பள்ளி, அயர்னப்பள்ளி ஆகிய 5 ஊராட்சிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த 5 ஊராட்சிகளில் உள்ள ஏரிகள், கால்வாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுவதும் வறண்டு விட்டன. இதனால் இப்பகுதி மக்கள் குடிக்க தண்ணீரின்றி கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தநிலையில், தென்பெண்ணை ஆற்று நீரை கிளை கால்வாய்கள் வழியாக உத்தனப்பள்ளி, கொம்மேபள்ளி உள்பட 5 ஊராட்களில் உள்ள ஏரிகளுக்கு திருப்பி விட வேண்டும் என வலியுறுத்தி நேற்று சம்பந்தப்பட்ட 5 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் முருகன் கோவில் பகுதியில் சாமியானா பந்தல் அமைத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் விவசாயிகள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 300–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு


இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊராட்சிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. ஏரி, குளங்கள், கால்வாய்கள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. இதனால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தென்பெண்ணை ஆற்றுநீரை கிளை கால்வாய்கள் வழியாக எங்கள் ஊராட்சிகளில் உள்ள ஏரிகளுக்கு திருப்பி விட வேண்டும்.

அவ்வாறு செய்தால் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தென்பெண்ணை ஆற்றுநீரை எங்கள் ஊரின் ஏரிகளுக்கு திருப்பி விடும் வரை தொடர்ந்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்களின் ‘‘என் தேசம் என் உரிமை‘‘ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் நேரடியாக வந்து பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டமானது விடிய விடிய நீடித்தது. இதனால் உத்தனப்பள்ளி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்