தேன்கனிக்கோட்டையில் மூடப்பட்ட கிணற்றை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

தேன்கனிக்கோட்டையில் மூடப்பட்ட கிணற்றை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் தாசில்தாரிடம், பா.ஜனதாவினர் மனு

Update: 2017-03-01 22:45 GMT
தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்செட்டி சாலையில் சோதனைச்சாவடி அருகில் கிணறு ஒன்று இருந்தது. அந்த கிணற்றில் உள்ள நீரை தேன்கனிக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் எடுத்து சுற்று வட்டார பகுதிகளுக்கு வினியோகித்து வந்தது. இந்த நிலையில் அந்த கிணற்றை சிலர் மூடி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை நகர பா.ஜனதா தலைவர் பார்த்திபன், மாவட்ட செயலாளர் நாராயணன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் அருண்குமார், மாநில மகளிர் அணி செயலாளர் மதிவதனகிரி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபு மற்றும் பா.ஜனதா பொறுப்பாளர்கள், தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமகிருஷ்ணனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–

தேன்கனிக்கோட்டை பகுதியில் குடிநீர் பிரச்சினை கடுமையாக நிலவி வருகிறது. தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த கிணற்றை சிலர் சுயநலத்திற்காக மூடி விட்டார்கள். எனவே மூடப்பட்ட கிணற்றை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நீர் ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும். தேன்கனிக்கோட்டை பகுதியில் குடிநீர் ஆதாரங்களை பெருக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதே தொடர்பாக தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையத்திலும் பா.ஜனதா சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்