டாஸ்மாக் கடைகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டம்; பா.ம.க.வினர் 106 பேர் கைது

அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 106 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2017-03-01 23:00 GMT
மீன்சுருட்டி,

உச்சநீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் இந்த உத்தரவை மீறி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல இடங்களில் மதுபான கடைகள் செயல்பட்டு வருவதாகவும், அவ்வாறு செயல்பட்டு வரும் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் பா.ம.க.வினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி, அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே நெல்லித்தோப்பு கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் பா.ம.க.வினர் நேற்று வந்தனர். அவர்கள் அந்த கடையின் முன்பகுதியில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இது அகற்றப்பட வேண்டிய சட்ட விரோத மதுக்கடை வழிகாட்டி பலகை என்ற வாசகம் உள்ள ஸ்டிக்கரை ஒட்டினர். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவு நகலையும் ஒட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாவட்ட செயலாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் பாலசண்முகம், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், வீரபாண்டியன், பாஸ்கரன் உள்பட 30 பேரை கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்

இதேபோல் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் ரெங்கநாதன் தலைமையில் பா.ம.க.வினர் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் கதவில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயன்றனர். இதையடுத்து ரெங்கநாதன், சுதாகரன், பாண்டியன், அருண்குமார் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருமானூர் அருகேயுள்ள வாரணவாசியில் உள்ள டாஸ்மாக் கடையில் பா.ம.க. தொகுதி பொறுப்பாளர் தர்மபிரகாஷ் தலைமையில் மாநில உழவர் பேரியக்க செயலாளர் ரவிசங்கர், அரியலூர் ஒன்றிய செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் பா.ம.க.வினர் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயன்றனர். இதை யடுத்து தர்மபிரகாஷ் உள்பட 21 பேரை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். ஆண்டிமடத்தில் உள்ள டாஸ் மாக் கடையில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட முயன்ற மாநில துணை செயலாளர் வைத்தி உள்பட பா.ம.க.வினர் 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

குன்னம்

பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் கட்சியினர் குன்னம் அரியலூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் வழிகாட்டி பலகையில், ‘உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இது அகற்றப்பட வேண்டிய சட்ட விரோத மதுக்கடை வழிகாட்டி பலகை’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை ஒட்டினர். இதில் மாநில துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் மருதைவேல், வேப்பூர் ஒன்றிய செயலாளர்கள் அருள், ஜெயபிரகாஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் வடமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்