பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி சிவகாசியில் உண்ணாவிரதம்

புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு: பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி சிவகாசியில் உண்ணாவிரதம் முழு கடையடைப்பு நடத்தி வணிகர்களும் பங்கேற்பு

Update: 2017-03-01 22:45 GMT

 சிவகாசி,

பட்டாசு தொழிலை பாதுகாப்பதற்கு மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக சிவகாசியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக வணிகர்கள் முழு கடையடைப்பு நடத்தி உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டம்

பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்படவுள்ள புதிய விதிகளை தளர்த்தக்கோரி பட்டாசு கடைகளை அடைத்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆலை அதிபர்களும் ஆலைகளை மூடி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் மூலம் பட்டாசு உற்பத்தி முற்றிலுமாக பாதிப்பு அடைந்தது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதற்கு ஒரு தீர்வு காண நேற்று திருத்தங்கல் குறுக்குப் பாதை திடலில் ஆலை மற்றும் கடை உரிமையாளர்கள் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகர் பகுதிகளில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்கள், அச்சக உரிமையாளர் சங்கம் காய்கறி விற்பனையாளர் சங்கம், லாரி உரிமை£யளர் சங்கம் உட்பட பல்வேறு வணிகர் சங்கங்கள் கடை அடைப்பு நடத்தி உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் புதிய விதிமுறைகள் வகுத்து நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர். அந்த விதிகளை அமுல்படுத்தினால் 99 சதவீதம் பட்டாசு கடைகள் மூடும் நிலைக்கு தள்ளப்படும். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் இணைந்து உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இதனால் பட்டாசு கடைகளையும் தொழிற்சாலைகளையும் தொடர்ந்து நடத்த முடியாத காரணத்தினால் வேறு வழியின்றி கடந்த 14 நாட்களாக மூடியுள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தியில் ரூபாய் 200 கோடி இழப்பும் சார்பு தொழில்களும் முடங்கி உள்ளது. மத்திய மாநில அரசுகள் தலையிட்டு நீதிமன்ற நியமன குழுவின் பரிந்துரைகள் சாத்தியமில்லாதவை என நிராகரிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக பட்டாசு கடைகளையும் தொழிற்சாலைகளையும் மூடுவது அரசின் கொள்கை முடிவு அல்ல என்பதை தெளிவுப்படுத்தி தொழிலை காப்பாற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது தற்போது பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்க அரசு துணை நிற்கும் என்றார். ஜெயலலிதா சீனப்பட்டாசு ஊடுருவலை தடுக்க மத்திய அரசை நாடி எவ்வாறு தடுத்தாரோ அதேபோல் தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு இந்த வி‌ஷயத்தை கொண்டு சென்று நீதிமன்றம் மூலம் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்