பட்டாசு கடைகளுக்கான புதிய விதிமுறை: உற்பத்தியாளர், தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்தினை கேட்டு முடிவெடுக்க வேண்டும்
பட்டாசு கடைகளுக்கான புதிய விதிமுறை: உற்பத்தியாளர், தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்தினை கேட்டு முடிவெடுக்க வேண்டும் கலெக்டரிடம் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் மனு
விருதுநகர்,
பட்டாசு கடைகளுக்கான புதிய விதிமுறை குறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கலந்து பேசி கருத்து ஒற்றுமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பட்டாசு தொழில்கலெக்டர் சிவஞானத்திடம் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சமுத்திரம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
சிவகாசி தொகுதி கரிசல் பூமி. மழை மறைவு பிரதேசமான இந்த பகுதியில் பிரதான தொழில் பட்டாசு தொழில். இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமாகவும் இந்த தொழில் தான் இருந்து வருகிறது.
இந்த தொழிலில் அடிக்கடி ஏற்படும் விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றது. விபத்துகளை தடுக்க விதிமுறைகள் இருந்தும் அதை அமல் படுத்துவதில் அலட்சியப் போக்கு தொடர்கிறது. விபத்து தடுப்பு விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.
பாதிப்புபட்டாசு ஆலைகளைத் தொடர்ந்து கடைகளில் ஏற்பட்ட தொடர் விபத்துகளின் காரணமாக கடைகளுக்கு புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையாக உற்பத்தியாளர்களையும், வியாபாரிகளையும் கலந்தாலோசிக்காமல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்டாசு உற்பத்தி செய்தால் அதனை விற்க முடியாது எனக்கருதி கடந்த 10 நாட்களாக பட்டாசு ஆலைகளை மூடி விட்டனர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஏற்கனவே கடும் வறட்சி உள்ள நிலையில் பட்டாசு தொழில் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பது மாவட்டத்தின் ஒட்டு மொத்த மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. எனவே தொழில்களை பாதுகாத்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய மாவட்ட நிர்வாகத்திற்கு மனித உயிர்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போராடும் பட்டாசு உற்பத்தியாளர்களையும், தொழிற்சங்க பிரதிநிதிகளையும் அழைத்து பேசி கருத்து ஒற்றுமை அடிப்படையில் உயிர் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்படுத்தி பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.