தமிழகத்தில் மாற்றத்தை கொடுக்கும் சக்தியாக பா.ஜ.க. இருக்கும்: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் மாற்றத்தை கொடுக்கும் சக்தியாக பா.ஜ.க. இருக்கும் என மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. வலுப்பெற வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஊழியர்கள் கூட்டம், பொதுக்கூட்டம் நடத்தி வருகிறோம். தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவை. தி.மு.க., அ.தி.மு.க. இந்த இரு கட்சிகளும் ஊழலில் சிக்கிவிட்டன. ஊழலற்ற ஆட்சியை, தெளிவான ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்ல பா.ஜ.க.வினால் மட்டுமே முடியும்.
சட்டத்திற்கு முரணானதுதமிழகத்தில் தற்போது பல பிரச்சினைகள் உள்ள நிலையில் இப்போதுள்ள ஆட்சி நிலையாக இருக்குமா? நேர்மையாக நடக்குமா? என மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக முதல்–அமைச்சர் பழனிச்சாமி, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை சந்திப்பது ஆரோக்கியமான சூழல். ஆனால் அதேசமயம் அமைச்சர்கள் சிலர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பது ஆரோக்கியமான சூழல் அல்ல. இது சட்டத்திற்கு முரணானது. அவர்கள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கும் எதிரானது. இதற்கு பா.ஜ.க. சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், 8–ந் தேதி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தை அரசியலாக்குவது மிகவும் வேதனையளிக்கக் கூடியதாக உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை தேவை என்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிகாரத்தில் இருக்கும்போது அவர் அதனை செய்திருக்க வேண்டும். அவரது கோரிக்கை நியாயமான ஒன்றுதான். 75 நாட்கள் மருத்துவமனையில் நடந்த விவரங்களை சட்ட விதிகளுக்குட்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மாற்றத்தை கொடுக்கும் சக்திதமிழகத்தில் ஆளுங்கட்சி சரியாக செயல்படுகிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறி. எதிர்கட்சி சரியாக செயல்படுகிறதா எனக்கேட்டால் அதுவும் கேள்விக்குறிதான். மு.க.ஸ்டாலின், ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்கிறார். தி.மு.க.வும் ஊழல் கரைபடிந்த கட்சிதான். இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை கொடுக்கும் சக்தியாக பா.ஜ.க. இருக்கும்.
இயற்கை எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் போன்ற இடங்களில் மிகப்பெரிய போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் உண்மை தன்மையை போராட்டக்காரர்கள், மாணவர்கள், அவர்களை வழிநடத்துபவர்கள் உணர்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு வளர்ச்சிக்கான திட்டம். எந்தவிதத்திலும் கடல்நீர் உள்ளே வராது. சுற்றுச்சூழலை பாதிக்காது. ஆந்திரா போன்ற மாநிலங்களில் நெல் விளையும் பூமிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுகிறது. இதை தமிழகத்தில் எடுப்பதன் மூலம் நன்மை இருக்கிறது. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். 1 சதவீதம் பாதிப்பு என்றால் கூட இந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்தாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட தலைவர் விநாயகம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆதவன், ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராம.ஜெயக்குமார், சுகுமார், கோட்ட பொறுப்பாளர் மனோகரன், மாவட்ட செயலாளர்கள் துரை.சக்திவேல், ராஜிலு, மாநில வணிகர் அணி செயலாளர் பாலசுப்பிரமணியன், அறிவுசார் அணி தலைவர் தனசேகரன், நகர தலைவர் பழனி உள்பட பலர் உடனிருந்தனர்.