தமிழக மக்களுக்கு பணியாற்ற பா.ஜ.க. காத்திருக்கிறது: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

தமிழக மக்களுக்கு பணியாற்ற பா.ஜ.க. காத்திருக்கிறது கடலூரில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு

Update: 2017-03-01 22:30 GMT
பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சரவணசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் சக்திகணபதி, ஆர்.குணசேகரன், செல்வகுமார் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஏ.எம்.வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்கு சென்று பிரதமரையும், மத்திய மந்திரிகளையும் சந்தித்துள்ளார். இவர்களையெல்லாம் சந்தித்தால் வளர்ச்சித்திட்டங்கள் வரும், ஆனால் அமைச்சர்கள், பெங்களூருக்கு சென்று சிறையில் உள்ள சசிகலாவை பார்த்ததை ஏற்க முடியாது.

திராவிட கட்சிகளே காரணம்

தமிழக வாக்காளர்கள் இனிமேல் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள். சட்டமன்றம் கலாட்டாமன்றமாக மாறி விட்டது. சட்டமன்றம் நாகரீகமாக நடைபெறாததற்கு திராவிட கட்சிகள் தான் காரணம். சட்டமன்றத்தில் தாமரை பூக்கும் போது தான் சட்டமன்றம் நியாயமாக நடைபெறும். ஊழலற்ற ஆட்சியைத்தர பா.ஜ.க.வால் மட்டுமே முடியும்.

‘நீட்’ தகுதிதேர்வு வேண்டாம் என்று அரசியல் கட்சி தலைவர்கள் சொல்கிறார்கள். இப்போது மருத்துவப்படிப்பு படிப்பவர்களில் 2 சதவீதம் பேரே கிராமப்புற பள்ளிகளில் படித்தவர்கள். ஆனால் ‘நீட்’ தகுதிதேர்வு வந்தால், கிராமப்புற மாணவர்கள் ஒரு பைசாக்கூட செலவில்லாமல் மருத்துவ ‘சீட்’ வாங்க முடியும்.

3–வது பெரிய கட்சி

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வரும், அதற்கு பாரதீய ஜனதா தான் அடிக்கல் நாட்டும். சமீபத்தில் வடமாநிலங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தலிலும் 3–வது பெரிய கட்சியாக பா.ஜ.க. வளர்ந்துள்ளது. விரைவில் தமிழகத்தில் முதல் அரசியல் சக்தியாக பா.ஜ.க. வரும்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ரேசன் பொருட்களை பாக்கெட் போட்டு கொடுக்கிறார்கள். இங்கே ரேசன் அரிசி எடை சரியாக இல்லை? நேற்று முன்தினம் நான் சாலிகிராமத்துக்கு சென்ற போது, அங்குள்ள ரேசன்கடையில் புழுங்கல் அரிசியை தவிர வேறொன்றும் இல்லை. எனவே ரேசன் பொருட்களை பாக்கெட் போட்டு வழங்கும் பா.ஜ.க. வேண்டுமா? அல்லது திராவிட கட்சிகள் வேண்டுமா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஆண்டது போதும்.

வாய்ப்பு தாருங்கள்

கன்னியாகுமரி மக்கள் தாமரைக்கு வாக்களித்ததால், வளர்ச்சித்திட்டங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழக மக்களுக்கு பணியாற்ற பா.ஜ.க. காத்து கிடக்கிறது. தமிழகம் வளர பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும். எனவே பா.ஜனதாவுக்கு வாய்ப்பு தாருங்கள்.

இவ்வாறு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் கணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் தலைவர் கோபிநாத் கணேசன், பண்ருட்டி நகர பொதுச்செயலாளர் தண்டபாணி, நிதிப்பிரிவு வைகை.துரைதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்