நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி ஆசிரியை சாவு; கணவர்–மகன் காயம்

சத்தியமங்கலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி ஆசிரியை சாவு; கணவர்–மகன் காயம்

Update: 2017-03-01 22:00 GMT

சத்தியமங்கலம்,

பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமியை கும்பிட்டு விட்டு திரும்பியபோது சத்தியமங்கலத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஆசிரியை இறந்தார். அவருடைய கணவர் மற்றும் மகன் காயம் அடைந்தனர்.

ஆசிரியை

ஈரோடு மாவட்டம் சத்தியங்கலத்தில் உள்ள அத்தாணி ரோட்டில் வசித்து வருபவர் சேகர் (வயது 39). இவர் அந்த பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் அலுவலக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கோகிலா (30).

இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் கவுதம் (9). இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 4–ம் வகுப்பு படித்து வருகிறான்.

பழனிக்கு சாமி கும்பிட சென்றனர்

இந்த நிலையில் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சேகர் தன்னுடைய குடும்பத்துடன் காரில் நேற்று முன்தினம் காலை சென்றார். அங்கு தங்க தேர் இழுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் சத்தியமங்கலத்துக்கு இரவில் திரும்பினார். காரை சேகர் ஓட்டினார். காரின் முன் பகுதியில் உள்ள இருக்கையில் அவருடைய மனைவி கோகிலா உட்கார்ந்திருந்தார். பின் இருக்கையில் கவுதம் இருந்தான். சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் நேற்று அதிகாலை 1½ மணி அளவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக காரின் முன் டயர் பஞ்சர் ஆனது. இதில் நிலைதடுமாறிய கார் அங்கு ரோட்டோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் முன் புறத்தில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

சாவு

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் சேகருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் காரின் பின் இருக்கையில் இருந்த கவுதமுக்கும் காயம் ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் காயம் அடைந்த சேகர் மற்றும் கவுதமை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கோகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்