பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து மறியல் போராட்டம்

பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரளா அரசை கண்டித்து மறியல் போராட்டம்: த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர் பேட்டி

Update: 2017-03-01 22:45 GMT

திருப்பூர்,

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வரும் கேரளா அரசை கண்டித்து வருகிற 12–ந்தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று திருப்பூரில் த.மா.கா. இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா தெரிவித்தார்.

மாநில நிர்வாகிகள் கூட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் காந்திநகரில் உள்ள த.மா.கா. அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார்.

திருப்பூர் மாநகர், மாவட்ட தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மறியல் போராட்டம்

ஜல்லிக்கட்டை போல நெடுவாசல் பிரச்சினைக்கும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி தீர்மானம் இயற்ற வேண்டும். ‘நீட்’ தேர்வு குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு கேள்விக்குறியாக உள்ளது. தமிழக அரசு கடந்த ஒருசில மாதங்களாகவே எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் இருந்து வருகிறது. முதல்–அமைச்சர் ஒரு குடும்பத்திற்காக பணியாற்றாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் பணியாற்ற வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க சரியான இடமாக பெருந்துறை சிப்காட் பகுதியை மத்திய குழு பரிந்துரைத்த போதிலும், மத்திய–மாநில அரசுகள் பரிந்துரைக்காத தஞ்சாவூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது சந்தேகத்திற்குரியதாக அமைந்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழில் முடங்கி போய் உள்ளது. மணல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணையை கட்டும் கேரள அரசை கண்டித்து வருகிற 12–ந்தேதி வாளையாறு சோதனை சாவடி அருகே த.மா.கா. இளைஞரணி சார்பில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். உள்ளாட்சி தேர்தல் குறித்து தலைவர் உரிய நேரத்தில் நல்ல முடிவை அறிவிப்பார். இளைஞர்களை முன்னிலைப்படுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தலை சந்திக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

14–ந்தேதி ஆர்ப்பாட்டம்

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரம் வருமாறு:–

*தமிழக உள்ளாட்சி தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அதிக அளவில் போட்டியிடுவார்கள்.

*அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக்கோரி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 14–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

*ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த அரசு தனித்தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.

*அத்திக்கடவு–அவினாசி திட்டத்திற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

*பனியன் தொழிலுக்கு தேவையான நூல் விலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்