மங்களூருவில், தமிழக ஜவுளி வியாபாரிகளிடம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது

மங்களூருவில், தமிழக ஜவுளி வியாபாரிகளிடம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-01 21:00 GMT

மங்களூரு,

மங்களூருவில், தமிழக ஜவுளி வியாபாரிகளிடம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

தமிழக ஜவுளி வியாபாரிகள்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வாமஞ்சூர், நீர்மார்க்கம், திருவயல், பொல்லாழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தமிழக ஜவுளி வியாபாரிகள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் தினமும் துணிகளை தங்களுடைய மோட்டார் சைக்கிளிலோ, மொபட்டிலோ மூட்டைகளாக கட்டிக்கொண்டு, ஒவ்வொரு கிராமமாக சென்று விற்பனை செய்து வருவது வழக்கம்.

அதுபோல் துணி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தங்களுடைய இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, அவர்களை மோட்டார் சைக்கிளிலோ, ஆட்டோவிலோ பின்தொடர்ந்து வரும் கும்பல் திடீரென வழிமறித்து அவர்களிடம் இருந்து பணம், நகைகள், துணிகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் செல்வதாக மங்களூரு புறநகர் போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன.

மர்ம கும்பல்

அதுகுறித்து விசாரணை நடத்த மாநகர உதவி போலீஸ் கமி‌ஷனர் சுருதி தலைமையில், மங்களூரு புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது செரீப் ராவுத்தர், சப்–இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், வெங்கடேஷ், ஹரீஷ், சந்திரசேகர், ஆச்சார்யா, சுபாஷ் உள்ளிட்டோர் அடங்கிய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மர்ம கும்பலை வலைவீசி தேடிவந்தனர்.

இதற்கிடையே கடந்த மாதம் 21–ந் தேதி மங்களூரு அருகே பித்துப்பாதை பகுதியில் தமிழக ஜவுளி வியாபாரியான வேல்முருகன், மங்களூரு பஞ்சமுகறு பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியான சுப்பிரமணி ஆகியோரிடம் இருந்து மர்ம கும்பல் நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டது.

போலீசார் விரட்டி பிடித்தனர்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்களூரு புறநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழக ஜவுளி வியாபாரி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர், வியாபாரியை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் வியாபாரியை தாக்கி கத்தியால் குத்திவிட்டு அவரிடம் இருந்து நகைகள், பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் பிடிக்க முயன்றனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் தப்பி ஓடினர். இதில் போலீசார் 2 பேரை விரட்டி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

2 பேர் கைது

பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், மங்களூரு டவுன் வாமஞ்சூர் பகுதியைச் சேர்ந்த முகமது ஆசீப்(வயது 29), முகமது ஆரீப்(23) ஆகியோர் என்பதும், 2 பேரும் தமிழக ஜவுளி வியாபாரிகளிடம் கொள்ளையடித்த சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும், அதுமட்டுமல்லாமல் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. மேலும் தப்பி ஓடியது ஆட்டோ டிரைவர் சப்வான் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் முகமது ஆசீப் மற்றும் முகமது ஆரீப் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கம், கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுடன் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்