இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டம் நடத்திய 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு அருகே உள்ள நெடுவாசல் என்ற கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் மத்திய அரசு திட்டத்திற்கு எதிராக அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், விவசாயிகள், மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
30 பேர் கைதுஅதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். நேற்று காலை கோவையை சேர்ந்த இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி திடீரென கோர்ட்டு வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் ‘ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராகவும், மாட்டுக்காக போராடிய நாங்கள் தமிழகத்தின் மண்ணை காக்கவும் போராட வருவோம்‘ என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்தனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வ.உ.சி. மைதானத்தில் ஒன்று கூடி போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதால் கடந்த சில நாட்களாக அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.