கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

பயிர்கடன் வழங்குவதில் காலதாமதம் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்;

Update: 2017-03-01 21:45 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள கேர்பன் கிராமத்தில் நெக்கிகம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் ஓரசோலை, கேர்பன், புதுமந்து, இருப்புக்கல், தொத்தமுக்கை, காத்துகுளி, பெத்தளா, பையங்கி, அட்டவளை உள்ளிட்ட 14 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் நிலவிவரும் வறட்சி காரணமாக விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளதால் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு மீண்டும் பயிர்கடன் வழங்கி வருகிறது. இதன்படி நெக்கிகம்பை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பயிர்கடன் வழங்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வங்கி அதிகாரி ஒருவர் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குவதில் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வங்கி தலைவர் பச்சநஞ்சன், மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் முகமது மீரான், குன்னூர் கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்