இலவம் காய் மகசூல் அதிகரிப்பு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

கூடலூர் பகுதிகளில் இலவம் காய் மகசூல் அதிகரித்துள்ள நிலையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2017-03-01 22:00 GMT
தேனி மாவட்டம் கூடலூர், கல் உடைச்சான்பாறை, ஏகலூத்து, பெருமாள்கோவில்புலம், கழுதைமேடு, பளியன்குடி, புதுரோடு ஆகிய பகுதிகளில் ஏராளமான மானாவாரி நிலங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் இலவ மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர சுரங்கனார் பகுதி, வண்ணாத்திப்பாறை, பளியன்குடியிருப்பு பகுதிகளிலும் வனத்துறைக்கு சொந்தமான இலவ மரங்கள் உள்ளன. இங்கு காய்க்கும் இலவங்காய்களை பறித்து கொள்ளும் உரிமை தேனி மாவட்ட வன அலுவலகத்தில் ஏலம் விடப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு வனத்துறைக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

போதிய விலை...

ஆனால் மானாவாரி நிலங்களில் இலவ மரங்கள் வளர்த்துள்ள விவசாயிகள், மொத்தமாக வியாபாரிகளிடம் ஒப்பந்தம் செய்து பணத்தை பெற்றுக்கொள்வார்கள். சிலர் காய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரம் பிரித்தும் விற்பனை செய்கின்றனர். இலவம் காய்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பஞ்சு, மெத்தை மற்றும் தலையணை தயாரிக்க அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் காய் மற்றும் இலவம் பஞ்சுகளை வாங்க போடி, வருசநாடு பகுதியில் உள்ள வியாபாரிகளும், உள்ளூர் வியாபாரிகளும் வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு இலவம் காய்கள் மகசூல் அதிகரித்தும், பஞ்சு விலை கடந்த ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ பஞ்சு ரூ.70–க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.42–க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் கவலை

போதிய விலை கிடைக்காததால் இலவம் காய்களை மரத்தில் பறிக்காமலேயே விவசாயிகள் விட்டுள்ளனர். இதனால் வெயிலில் காய்ந்து மரங்களிலேயே காய்கள் வெடித்து பஞ்சுகள் பறக்கின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்