பழனி சண்முகநதியில் தண்ணீர் திருட்டு: மின் மோட்டார்கள் பறிமுதல்

பழனி சண்முகநதியில் தண்ணீர் திருட்டு: 10 மின் மோட்டார்கள் பறிமுதல்

Update: 2017-03-01 21:30 GMT

பழனி,

பருவமழை பொய்த்து போனதால், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை கூட குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தநிலையில் பழனி பகுதியின் குடிநீர் ஆதாரமாக திகழும் சண்முகநதியின் இருகரைகளிலும் மின் மோட்டார்களை வைத்து தண்ணீர் திருடப்படுவதாக புகார் வந்தது. இதைத்தொடர்ந்து பழனி சப்–கலெக்டர் வினீத் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது மின்மோட்டார் மூலம் தண்ணீர் திருடப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து ஆற்றின் கரையோரத்தில் பொருத்தியிருந்த 10 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையின்போது பழனி தாசில்தார் ராஜேந்திரன், பொதுப்பணித்துறை உட்கோட்ட அலுவலர் காஞ்சித்துரை, தமிழ்நாடு மின்சார வாரிய துணைப் பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்–கலெக்டர் வினீத் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்