நெல்லையில் நடந்த கைதி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது 3 மாதங்களுக்கு முன்பே சதித்திட்டம் தீட்டியது அம்பலம்

நெல்லையில் போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2017-03-01 20:30 GMT

நெல்லை,

நெல்லையில் போலீஸ் ஜீப்பை வழிமறித்து கைதி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். 3 மாதத்துக்கு முன்பே கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது.

கைதி கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புல்லாவெளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிங்காரம் என்ற பாலசுப்பிரமணியன் (வயது 47). பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

கடந்த 24–ந் தேதி ஒரு வழக்கு சம்பந்தமாக தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக சிங்காரத்தை போலீசார் பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஒரு ஜீப்பில் ஏற்றி தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர். பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் சென்ற போது போலீஸ் ஜீப்பை காரில் வந்தவர்கள் வழிமறித்து சிங்காரத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் குமரி மாவட்டம் கருங்கல் பாலூரை சேர்ந்த அருள்மணி (28), கருங்கல் பகுதியை சேர்ந்த சேட் என்ற அஜீன் (20), கார்மேகம், மற்றும் சந்தோஷ் (26) ஆகிய 4 பேரை ஏற்கனவே கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்த ஜேக் வெஸ்லி (28) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் கார்களை வாங்கி, விற்கும் புரோக்கர் ஆவார். இவர்தான் கொலையாளிகளுக்கு தேவையான கார் மற்றும் மினி லாரிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பே கொலையாளிகள் சதித்திட்டம் தீட்டி உள்ளது தெரியவந்தது. அதாவது சிங்காரத்தை எப்படி கொலை செய்ய வேண்டும் என்று சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து உள்ளனர். 3 மாதங்களுக்கு முன்பு இதற்கு தேவையான கார்களை வாங்கி உள்ளனர். கடன் தவணை செலுத்தாத கார்களை வாங்கி, அவற்றைக் கொண்டு நெல்லை, தூத்துக்குடி ரோட்டில் சென்று எந்த இடத்தில் தாக்குதலை நடத்தலாம் என்றும் அவ்வப்போது சென்று ஒத்திகை பார்த்து உள்ளனர்.

மேலும் பழைய குற்றவாளிகளை இதற்கு பயன்படுத்தினால் திட்டம் கசிந்து விடும் என்று புதிய இளைஞர்களை கொலைக்கு பயன்படுத்தி உள்ளனர். இதை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கண்டுபிடித்து உள்ளனர். இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்