வாகன விபத்து வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டத்தில், வாகன விபத்து வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறையை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் நேற்று காலை தொடங்கி வைத்தார்.

Update: 2017-03-01 21:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், வாகன விபத்து வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறையை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் நேற்று காலை தொடங்கி வைத்தார்.

வாகன விபத்து வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில், வாகன விபத்து வழக்குகளுக்கான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை நேற்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் கலந்து கொண்டு, வாகன விபத்து வழக்கு ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்–இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவணங்கள்

பின்னர், போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் கூறியதாவது:– மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு உள்ளது. அனைத்து போலீஸ் நிலையங்களும் பிரத்யேக இணையதளம் மூலம் இணைக்கப்பட்டு உள்ளது. இன்று(அதாவது நேற்று) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வாகன விபத்து வழக்கு ஆவணங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்க ஏதுவாக வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும், பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக மாதிரி வரைபடம், வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாகன அனுமதி சான்றிதழ், வாகன காப்பீட்டு சான்றிதழ், பாதிக்கப்பட்ட நபருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

காப்பீடு அலுவலகம்

பதிவேற்றம் செய்யப்பட்ட வாகன விபத்து வழக்கு ஆவணங்கள் அடுத்த மாதம்(ஏப்ரல்) 1–ந் தேதி முதல் இணையதளம் மூலம் காப்பீடு அலுவலகம் மற்றும் கோர்ட்டுக்கு அனுப்பப்பட உள்ளது. அவர்கள் தேவையான ஆவணங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மாவட்டத்தில் கடந்த ஆண்டு 59 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். வாகன விபத்துக்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விபத்து வழக்குகளை பாதியாக குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்