குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடரும் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பேட்டி
நெல்லை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடரும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் கூறினார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடரும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் கூறினார்.
ஆவணங்கள் மையம்விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு வழக்குகளில் உரிய தீர்வு, விரைந்து கிடைக்கும் வகையில் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஒருங்கிணைத்து பாதுகாத்து வைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சார்பில் தாழையூத்து போலீஸ் நிலைய வளாகத்தில், ஆவணங்கள் பாதுகாப்புக்கு என்று தனி மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த மையத்தை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு, தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் நிருபர்களிடம் கூறியதாவது:–
குண்டர் சட்டத்தில் கைதுபோலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளால், நெல்லை புறநகர் மாவட்டத்தில் கொலை குற்றங்கள் 20 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளன. கடந்த 2014–ம் ஆண்டு 105 கொலைகளும், 2015–ம் ஆண்டில் 98 கொலைகளும், 2016–ம் ஆண்டு 86 கொலைச் சம்பவங்களும் நடந்துள்ளன. கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு சட்டங்களில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2015–ம் ஆண்டு 150 பேரும், 2016–ம் ஆண்டு 181 பேரும், இந்த ஆண்டு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 27 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடும் நடவடிக்கைகொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை உடனுக்குடன் போலீசார் கைது செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 20 கொலை குற்றங்கள் வீதம் குறைந்து வருகின்றன. எனவே குற்றங்களை தடுக்க போலீசாரின் கடும் நடவடிக்கைகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.