திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை

திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-03-01 19:30 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

தனியார் நிதி நிறுவனம்

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகேயுள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் மேல்தளத்தில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

இதில் திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாத தவணை மற்றும் மொத்தமாக பணம் செலுத்தி வந்தனர்.

நிதி நிறுவனத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு பொதுமக்கள் பணம் செலுத்தினால், வட்டியுடன் செலுத்திய தொகையை விட அதிகமாக பணம் கிடைக்கும் என்று முகவர்கள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் விளம்பரம் செய்துள்ளனர். அதனால் இங்கு சுமார் ரூ.7 கோடிக்கும் மேல் பொதுமக்கள் பணம் கட்டியதாக கூறப்படுகிறது.

முற்றுகை

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முழுப்பணம் செலுத்தி முடித்த பின்னரும் வட்டியுடன் பொதுமக்கள் செலுத்திய தொகையை நிதிநிறுவனம் கொடுக்கவில்லை. சில நாட்கள் கழித்து வாருங்கள் என்று கூறி பொதுமக்களை பல தடவை அலைக்கழித்து காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50–க்கும் மேற்பட்டோர் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர். தங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தாங்கள் செலுத்திய பணத்தை உடனடியாக திரும்பி தர வேண்டும் என நிதி நிறுவன ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் திடீர் முற்றுகையை எதிர்பார்க்காத நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் என ஒவ்வொருவராக தங்கள் அறைக்கதவுகளை பூட்டி விட்டு அங்கிருந்து வெளியேறி தலைமறைவானார்கள்.

நிதி நிறுவன அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் தங்களது பணத்தை தர வருவார்கள் என பல மணி நேரம் பொதுமக்கள் நிதி நிறுவனத்தில் காத்திருந்தனர். வெகு நேரமாகியும் நிதி நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் வராததால் ஏமாற்றத்துடன் பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்