இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானத்தின் டயர் வெடித்தது 3 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது

மங்களூரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானத்தின் டயர் வெடித்தது. இதனால் 3 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது.

Update: 2017-02-28 21:00 GMT

மங்களூரு,

மங்களூரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானத்தின் டயர் வெடித்தது. இதனால் 3 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது.

விமானத்தின் டயர் வெடித்தது

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவாவுக்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி. 29 கே என்ற ஜெட் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, இதுகுறித்து மங்களூரு விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கடற்படை விமானம் தரையிறங்க மங்களூரு விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்தனர். அதன்படி, நேற்று மாலை 5 மணி அளவில் கடற்படை விமானம் மங்களூரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் வந்தபோது, திடீரென்று அதன் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஓடுபாதை சேதமடைந்தது.

3 மணி நேரம் மூடப்பட்டது

அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்ததும், விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதையடுத்து ஓடுபாதை சரிசெய்யும் பணி நடந்தது. இதையடுத்து இரவு 8 மணிக்கு ஓடுபாதை சரி செய்யப்பட்டது. இதன்காரணமாக மங்களூரு விமான நிலையம் 3 மணி நேரம் மூடப்பட்டது.

இதனால் மங்களூருவில் இருந்து எந்த விமானமும் புறப்படவில்லை. மற்ற பகுதிகளில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மங்களூருவுக்கு வர வேண்டிய 3 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. மங்களூருவில் இருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. மங்களூரு விமான நிலையத்தில் ஓடுபாதை சரி செய்யப்பட்ட பின்னர், விமானங்கள் வழக்கம்போல வந்து சென்றன.

மேலும் செய்திகள்