மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்

மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

Update: 2017-02-28 22:45 GMT
திருச்சி,

பேட்டி

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இயற்கை எரிவாயு திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியும் முழு ஆதரவு தருகிறது. மேலும், அங்கு நாளை (இன்று) நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது.

வியாபார சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் இதற்கு ஆதரவு தர வேண்டும். எந்த காரணத்தாலும் இயற்கை எரிவாயு நெடுவாசலுக்கு வந்துவிடாதபடி காங்கிரஸ் கட்சி மக்களோடு இணைந்து போராடும்.

தமிழகம் புறக்கணிப்பு

தமிழகத்தில் பல மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர். பல மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் கூட இன்னும் சில நாட்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விடும். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வார்தா புயல் பாதிப்பினால் நிவாரண நிதியாக ரூ.27 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார். தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ரூ.39 ஆயிரத்து 500 கோடி நிதி வழங்க பிரதமரை சந்தித்து கேட்டுள்ளார். ஆனால் இதுவரை மத்திய அரசு ரூ.100 கோடி கூட தமிழகத்துக்கு ஒதுக்கவில்லை.

மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

ரேஷன் கடைகள் முன்பு போராட்டம்

மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். பொது வினியோக திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இதுவரை எந்தெந்த பொருட்கள் வழங்கப்பட்டதோ?. அது தொய்வில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு அதிகாரிகளிடம் கலந்து பேசி போதிய நிதியை ஒதுக்க வேண்டும். இதில் தமிழக அரசு மெத்தனமாக இருந்தால் தமிழகம் முழுவதும் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளின் முன்பு காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்