சமயபுரம் அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்

சமயபுரம் அருகே நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் மாடுகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர்.

Update: 2017-02-28 23:00 GMT
சமயபுரம்,

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம் சமய புரம் அருகே உள்ள தெற்கு இருங்களுரில் புனித தோமையார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தடை காரணமாக சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தற்போது தடை நீங்கியதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டரின் அனுமதியோடு நேற்று தெற்கு இருங்களுரில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகளை, இருங்களூருக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர். காளைகளை கால்நடை துறையினரும், மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினரும் பரிசோதித்த பின்னர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

காளைகள் சீறிப்பாய்ந்தன

இதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் துள்ளிக்கொண்டும், சீறிப்பாய்ந்தும் மைதானத்திற்குள் வந்தன. அவற்றை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. சில காளைகள் வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்து எல்லைக்கோட்டை கடந்து சென்றன. சில காளைகள் மாடுபிடி வீரர்களை கதிகலங்க செய்தன. சில காளைகள் மீண்டும் எல்லைக்கோட்டை தாண்டிச்சென்ற பின்னர், திரும்பி மீண்டும் மைதானத்திற்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்கப்பணம், தங்கக்காசு, வெள்ளிக்காசு, குத்து விளக்கு, சைக்கிள், மின்விசிறி, பாத்திரம் போன்ற ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

22 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் மொத்தம் 348 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 350 வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயமடைந்த சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை கீழத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சத்தியராஜ்(வயது 18), ஸ்ரீரங்கம் அருகே உள்ள கள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் பிரவீன்(24) ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டு, வீரர்களுக்கு அவ்வப்போது சில விதிமுறைகளை சுட்டிக்காட்டி அறிவுரைகள் வழங்கினார். மேலும் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமானவர்கள் ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் லால்குடி துணை சூப்பிரண்டு நடராஜன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் ஞான வேலன், தினேஷ்குமார், மீராபாய், சப்-இன்ஸ்பெக்டர் சுகந்தி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்