தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து விற்பனை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்து விற்பனை செய்பவர்கள் மீது பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-02-28 23:00 GMT
நொய்யல்,

வறண்டன

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவ மழை போதுமான அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக காவிரி ஆறு, ஏரி, குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது. அதேபோல் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள விவசாய கிணறுகள் மற்றும் குடிநீர் திட்ட கிணறுகள் ஆகியவற்றில் தண்ணீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டன.

இதனால் காவிரி பாசன பகுதியில் உள்ள தென்னை, வெற்றிலை, வாழை, கரும்பு, மரவள்ளி போன்ற பயிர்கள் போதுமான தண்ணீர் இன்றி காய்ந்து வருகின்றன. அதேபோல் பொதுமக்களுக்கும் போதுமான குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தவித்து வருகின்றன.

தண்ணீர் விற்பனை

இந்நிலையில் தவுட்டுப் பாளையம் பகுதியில் சிலர் காவிரி ஆற்றுக்குள் சட்ட விரோதமாக வட்டக்கிணறுகள் மற்றும் ஆற்றை ஒட்டிய பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து தவுட்டுப்பாளையம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

புஞ்சை புகழூர் பேரூராட்சியில் சுமார் 24 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். எங்களின் குடிநீர் தேவைக்காக தவுட்டுப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் குடிநீர் திட்ட கிணறுகள், நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் காகிதபுரம் பேரூராட்சி, நஞ்சைபுகழூர் ஊராட்சி ஆகியவற்றுக்கான குடிநீர் திட்ட கிணறுகளும் இப்பகுதியில் அமைந்துள்ளன.

பொதுவாக ஆறு , குளம், ஏரிகளில் அரசின் அனுமதியின்றி தனி நபர்கள் தண்ணீர் எடுக்க கூடாது என்பது விதி. ஆனால் அதையும் மீறி சிலர் தவுட்டுப்பாளையம் முதல் கட்டிபாளையம் வரை காவிரி ஆற்றுக்குள் சுமார் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வட்டக்கிணறுகளை அமைத்துள்ளனர்.

அதில் ஆயில் என்ஜின்களை பொருத்தி பைப் லைன் மூலம் அருகில் உள்ள தங்கள் நிலங்களுக்குள் தண்ணீரை எடுத்து செல்கின்றனர். அங்கு தனியார் தண்ணீர் லாரிகளுக்கு 12 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு லோடு 1,300 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதேபோல் அருகில் உள்ள விவசாய நிலங்களில் காய்ந்து வரும் பயிர்களுக்கு பாசனம் செய்ய ஒரு மணி நேரத்திற்கு ரூ.300 வீதமும் விற்பனை செய்கின்றனர்.

நடவடிக்கை

இதனால் தவுட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் திட்ட வினியோக கிணறுகளில் தண்ணீர் மட்டம் பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் பொதுமக்களுக்கான குடிநீர் வினியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தனியார் நிலங்களில் உள்ள விவசாய கிணறுகளிலும் தண்ணீர் மட்டம் மிகவும் குறைந்து பயிர்கள் காய்ந்து வருகின்றன. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக ஆற்றுக்குள் தண்ணீர் எடுத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்