வாழைத்தார் அறுவடை பணி தீவிரம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

பெட்டவாய்த்தலை பகுதியில் வாழைத்தார் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2017-02-28 22:45 GMT
பெட்டவாய்த்தலை,

வாழை சாகுபடி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா தேவஸ்தானம், பெட்டவாய்த்தலை, பழையூர்மேடு, சிறுகமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் ஏழரசி, கற்பூரவள்ளி, ரஸ்தாலி, பூவன் உள்ளிட்ட வாழை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு சில குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஓராண்டு நிறை வடைந்துள்ள நிலையில் தற்போது வாழைத்தார்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏழரசி, ரஸ்தாலியின் விலை சற்று அதிகரித்துள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

ஆற்றில் தண்ணீர் இல்லாமை, பருவ மழை பொய்த்தது போன்ற காரணங்களால் வாழையை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் இருந்தனர். இந்நிலையில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் பாய்ச்சியும், அருகில் உள்ள விவசாயிகளிடம் விலைக்கு தண்ணீர் வாங்கியும் போராடி விவசாயிகள் வாழையை காப்பாற்றினர். தற்போது அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏழரசி கிலோ ரூ.20 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 2 நாட்களுக்கு முன் 1 கிலோ ரூ.40 என விற்பனையானது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதியடைந்தனர். கற்பூரவள்ளி, பூவன் வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது அறுவடையாகும் ஏழரசி வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

செலவு அதிகம்

இதேபோல் பூவன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி தார்கள் மும்பை வரை விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இது குறித்து வாழை விவசாயி வடிவேல் கூறுகையில், ஏழரசி வாழை மட்டும் இந்த முறை விவசாயிகளுக்கு கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வாழைக்கு உரம், குச்சி உள்ளிட்ட பெரிய செலவினங்கள் இருந்தாலும் கிலோ ரூ.20-க்கு குறையாமல் வாழைத்தார்கள் விற்பனையானால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால் பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும், ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தாலும் இந்த முறை கடந்த ஆண்டை விட வாழையை காப்பாற்ற செலவு அதிகமாகியுள்ளது, என்றார். 

மேலும் செய்திகள்