உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜனதா முறைகேடு செய்ததாக போராட்டம்

உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜனதா முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளதாக மும்பை உள்பட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

Update: 2017-02-28 23:00 GMT

மும்பை,

உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜனதா முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளதாக மும்பை உள்பட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு

மராட்டியத்தில் அண்மையில் 10 மாநகராட்சி, 25 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 118 பஞ்சாயத்து சமிதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி வாகை சூடியது. மராட்டியத்தில் பா.ஜனதாவின் எழுச்சி சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு மிரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மராட்டியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜனதா முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

போராட்டம்

இது தொடர்பாக பா.ஜனதாவை கண்டித்து மும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மும்பை முல்லுண்டில் நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட சுமார் 500–க்கும் மேற்பட்டவர்கள் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புனேயில், ஜாங்களிமகாராஜா சந்திப்பு சாலையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திர மாதிரிக்கு மாலை அணிவித்து பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதே போல அகோலா, அமராவதி, நாசிக் உள்பட பல்வேறு இடங்களிலும் பா.ஜனதாவை கண்டித்து போராட்டங்கள் நடந்தன.

மேலும் செய்திகள்