12–ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது 15 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

மாநிலம் முழுவதும் நேற்று 12–ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

Update: 2017-02-28 23:00 GMT

மும்பை,

மாநிலம் முழுவதும் நேற்று 12–ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

பொது தேர்வு

மராட்டிய மாநில கல்வி வாரியம் ஆண்டு தோறும் 12, 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தல்களையொட்டி இந்த ஆண்டு பொது தேர்வு கால அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் எச்.எஸ்.சி. எனப்படும் 12–ம் வகுப்பு பொது தேர்வு நேற்று (செவ்வாய்கிழமை) தொடங்கியது.

இந்த தேர்வினை புனே, மும்பை, அவுரங்காபாத், நாசிக், கோலாப்பூர், அமராவதி, லாத்தூர், நாக்பூர், ரத்னகிரி ஆகிய கல்வி மண்டலங்களை சேர்ந்த 15 லட்சத்து 5 ஆயிரத்து 365 மாணவர்கள் எழுதினர். மும்பை கல்வி மண்டலத்தை பொறுத்தவரை தேர்வினை 557 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 672 மாணவர்கள் எழுதினர். இதில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 293 பேர் ஆண்கள். 1 லட்சத்து 57 ஆயிரத்து 379 பேர் பெண்கள்.

எளிமையாக இருந்தது

நேற்று ஆங்கிலத் தேர்வு நடந்தது. வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கூறினர். தொடர்ந்து தேர்வுகள் 25–ந் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுகள் காலை, மதியம் என 2 வேளைகளும் நடைபெறுகின்றன. காலை நடைபெறும் தேர்வுகள் 11 மணி முதல் 2 மணி வரையும் மாலை தேர்வுகள் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

பொது தேர்வினையொட்டி பெஸ்ட் பஸ்சில் மாணவர்கள் முன் பகுதி வாசல் வழியாகவும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் எவ்வித சிரமும் இன்றி பயணம் செய்வதை உறுதிப்படுத்து வகையில் முக்கிய பஸ்நிறுத்தங்களில் பெஸ்ட் கழக அதிகாரிகள் மேற்பார்வை பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல தேர்வுக்கு முன் சமூக வலைதளங்களில் வினாத்தாள் பரவுவதை தடுக்க தேர்வு மையங்களுக்குள் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்