வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீலகிரியில், வர்த்தகம் பாதிப்பு
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.100 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏ.ஐ.பி.ஓ.சி) சார்பில் அகில இந்திய அளவில் வங்கிகள் வேலை நிறுத்தம் நேற்று நடந்தது. நீலகிரி மாவட்டத்திலும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வேலை நிறுத்தத்தையொட்டி ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள விஜயா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் கஜேந்திரன், லோகேஸ்வரன் ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர்கள் நலனுக்கு எதிராக தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றக்கூடாது. 11–வது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தேவையற்ற நிபந்தனைகள் இல்லாமல் சுமூகமான முறையில் நடைபெற வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக வரைமுறைப்படுத்த வேண்டும்.
ஊதியம் வழங்க வேண்டும்பணமதிப்பிறக்க நடவடிக்கையால் இரவு, பகல் பாராமல் வேலை செய்த ஊழியர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க வேண்டும். பண மதிப்பு நீக்கத்தின் போது வங்கிகள் மீது திணிக்கப்பட்ட கூடுதல் நிதிச்சுமையை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு பணிக்கொடை உச்சவரம்பை நீக்க வேண்டும்.
வங்கி அதிகாரிகளுக்கான அடுத்த ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இணையான ஓய்வூதியத்தை வங்கி அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்புஆர்ப்பாட்டத்தில் ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யூகோ வங்கி, சென்ட்ரல் பாங்க்ஆப் இந்தியா, பரோடா வங்கி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறை வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தம் குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் ஒருசில தனியார் வங்கிகளை தவிர அனைத்து வங்கிகளும் இயங்கவில்லை. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.100 கோடி வரை வர்த்தகம் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.\
ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி
நீலகிரி மாவட்டம் தேயிலைக்கு அடுத்தபடியாக சுற்றுலாவை மட்டுமே நம்பி உள்ளது. வங்கி ஊழியர்கள் போராட்டம் காரணமாக ஊட்டியில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் காலியாக இருந்தது. ஒரு சில தனியார் மற்றும் அரசு வங்கி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் பணம் இருந்தது. இதனால் இந்த மையங்கள் முன்பு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்து சென்றனர். ஆனால் மதியத்திற்கு பின் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பணம் காலியானது. இதனால் சுற்றுலா பயணிகள் பணம் எடுக்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர். கூடலூர் நகரில் உள்ள 10–க்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டு இருந்தது.
இதேபோல் தேவர்சோலை, பந்தலூர், எருமாடு, கொளப்பள்ளி, நடுவட்டம், மசினகுடி உள்ளிட்ட இடங்களில் வங்கி சேவை நடைபெறவில்லை. மேலும் ஏ.டி.எம். மையங்களும் செயல் இழந்து காணப்பட்டது. கூடலூர் நகரில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இருந்தும் எடுக்க முடியாமல் போனது. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையத்தில் காலை முதல் மதியம் வரை பணம் எடுக்க முடிந்தது. ஆனால் அதன்பின்னர் பணம் முடிந்தது. இதேபோல் இதர வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் மூடியே கிடந்தது. இதனால் அவசர தேவைகளுக்காக பணம் எடுக்க முடியாமல் மக்கள் திணறினர். இதனால் அத்தியாவசிய மற்றும் அவசரக தேவைகளுக்காக கடன் வாங்கி தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.