தானேயில் இருவேறு இடங்களில் ரூ.96 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல் 4 பேர் கைது

தானேயில் இருவேறு இடங்களில் ரூ.96 லட்சம் பழைய நோட்டுகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-02-28 22:45 GMT

தானே,

தானேயில் இருவேறு இடங்களில் ரூ.96 லட்சம் பழைய நோட்டுகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

மராட்டிய மாநிலம் தானே, ஜாம்பளிநாக்கா சாலையில் சம்பவத்தன்று போலீசார் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது ஒரு காரில் தடை செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ரூ.46 லட்சம் பழைய நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் காரில் இருந்த 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்த தயாசங்கர் யாதவ்(வயது28), மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த பங்கஜ் கோயல்(40), காட்கோபர் பகுதியை சேர்ந்த சுனிக் முத்துராஜ்(29) என்பது தெரியவந்தது.

ரூ.50 லட்சம் பழைய நோட்டுகள்

இதேபோல நேற்று தானே குற்றப்பிரிவு போலீசார் தானே கோல்டன் டைஜ்நாக்கா மேம்பாலம் அருகில் வாகனங்களை சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் அவரது பையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மும்பை கஞ்சூர்மார்க்கை சேர்ந்த சேத்தன் சாதுசிங்(36) என்பது தெரியவந்தது.

மேற்படி 2 சம்பவங்களிலும் கைதான 4 பேரும் பழைய நோட்டுகளை கமி‌ஷன் அடிப்படையில் மாற்றி கொடுக்க வந்ததாக தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.96 லட்சம் பிடிபட்டுள்ளது. இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்