தேனி பனசலாற்றில் தண்ணீர் திருட அமைக்கப்பட்ட குழாய்கள் அகற்றம்
தேனி வனப்பகுதியில் உள்ள பனசலாற்றில் தண்ணீர் திருடுவதற்காக அமைக்கப்பட்ட குழாய்களை வனத்துறையினர் அகற்றினர்.;
தேனி,
தேனி வனப்பகுதியில் உள்ள பனசலாற்றில் தண்ணீர் திருடுவதற்காக அமைக்கப்பட்ட குழாய்களை வனத்துறையினர் அகற்றினர்.
தேனி அல்லிநகரத்தில் வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதி அமைந்து உள்ளது. இந்த மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பல்வேறு நீர் ஊற்றுகள், ஒன்றாக இணைந்து பனசலாறு என்ற ஆறாக தேனிக்கு வருகிறது. இந்த ஆறு எந்த வறட்சியில் வற்றாத ஜீவ நதியாக உள்ளது. தேனி நகரின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் இந்த ஆற்றில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் வரத்து இல்லை.தமிழகம் முழுவதும் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியால் இந்த ஆறும் வறண்டு போனதாக மக்கள் நினைத்தனர். ஆனால், மலையடிவார பகுதியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் 50–க்கும் மேற்பட்ட குழாய்கள் அமைத்து தண்ணீர் திருடப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் பார்த்தார். இதையடுத்து இந்த செய்தியை சுட்டிக்காட்டி, வனப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்யவும், அங்கு தண்ணீர் திருடுவதற்காக அமைக்கப்பட்ட குழாய்களை அகற்றவும் மாவட்ட வன அலுவலர் மாரிமுத்துவுக்கு கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டார். அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து அறிவுரையின் பேரில், தேனி வனத்துறை அலுவலர்கள் வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதிக்கு சென்று அங்கு தண்ணீர் திருடுவதற்காக அமைக்கப்பட்ட குழாய்களை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
குழாய்கள் அகற்றப்பட்டதன் எதிரொலியாக மலைப் பகுதியில் இருந்து தண்ணீர் மெதுவாக கீழ்நோக்கி இறங்கி வரத் தொடங்கின. வறண்டு கிடந்த ஆற்றில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி, வழிந்து மலையடிவாரத்தை நோக்கி வந்தன.
விவசாயிகள் மகிழ்ச்சிமலைப்பகுதியில் ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி வழியத் தொடங்கி விட்டதால், வன விலங்குகளுக்கான தண்ணீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது. மலை உச்சியில் தண்ணீர் வரத்து கனிசமான அளவில் உள்ளதாகவும், இந்த தண்ணீர் வீரப்ப அய்யனார் கோவிலை கடந்து கண்மாய்களுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தேனி வனச்சரகர் இடமாற்றம்: வன பாதுகாவலர் உத்தரவு
தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைப் பகுதியில் பனசலாற்றில் குழாய்கள் அமைத்து தண்ணீர் திருடப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2 மாதங்களாக வனத்துறையிடமும், கலெக்டர் அலுவலகத்திலும் விவசாயிகள் புகார் அளித்து வந்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. வனப்பகுதியில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைத்து தண்ணீர் திருடப்பட்ட நிலையிலும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், தேனி வனச்சரகர் மகேந்திரன் மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதில் பெரியகுளம் வனச்சரகர் சோலைராஜன் தேனி வனச்சரகராக நியமிக்கப்பட்டு உள்ளார். பெரியகுளம் வனச்சரகர் பணியையும் சோலைராஜன் கூடுதல் பணியாக கவனிக்கிறார். இதற்கான உத்தரவை மதுரை மண்டல வன பாதுகாவலர் நிகார் ரஞ்சன் பிறப்பித்துள்ளார். இந்த அதிரடி இடமாற்றம் வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.