மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பணிகள் பாதிப்பு

தேனி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் 900 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Update: 2017-02-28 23:15 GMT
வங்கிகள் வேலை நிறுத்தம்

வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசின் சீர்த்திருத்தங்களை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என 24 வங்கிகளின் 170 கிளைகள் அமைந்து உள்ளன. இதில் 154 வங்கி கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 900 பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். 4 தனியார் வங்கிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்க வில்லை. இதனால் இந்த வங்கிகளின் மொத்தம் 16 கிளைகள் நேற்று வழக்கம் போல் திறந்து இருந்தன.

பணிகள் பாதிப்பு

இந்த போராட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முழுமையாக பங்கேற்றன. வேலை நிறுத்தம் எதிரொலியாக வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கிப் பணிகளும், சேவைகளும் பாதிக்கப்பட்டன.

மாதத்தின் கடைசி நாள் என்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏ.டி.எம். வாசல்களில் பணம் எடுக்க அரசு ஊழியர்களும், பொதுமக்களும் காத்திருந்தனர்.

மேலும் செய்திகள்