சிங்கபெருமாள்கோவில் அருகே ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கின

சிங்கபெருமாள்கோவில் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கின.

Update: 2017-02-28 23:22 GMT
வண்டலூர்,

சிங்கபெருமாள்கோவில் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் சிக்கின.

3 பேர் பிடிபட்டனர்

காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சியில் உள்ள தாசரிகுப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் ஏராளமான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்து அதனை வெளிநாட்டுக்கு கடத்துவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக செங்கல்பட்டு வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று காலை 11 மணி அளவில் செங்கல்பட்டு வனஅலுவலர் கோபு, ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் தாசரிகுப்பம் கிராமத்திற்கு சென்று தனியார் குடோனை சுற்றிவளைத்தனர்.

அப்போது குடோனில் இருந்து லாரியில் செம்மரக்கட்டைளை ஏற்றிக்கொண்டிருந்த 3 பேரை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர்.

ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள்

பின்னர் குடோனை ஆய்வு செய்தபோது ஏராளமான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. பின்னர் அங்கிருந்த செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் கைப்பற்றினர். இந்த செம்மரக்கட்டைகள் சுமார் 20 டன் இருக்கும், இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகள், ஒரு சரக்கு ஆட்டோ போன்றவற்றை கைப்பற்றினர்.

இது குறித்து செங்கல்பட்டு வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்