குடிநீர் கேட்டு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-02-28 22:30 GMT
மின் மோட்டார்கள் பழுது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் செங்கட்டாம்பட்டி பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த கிணறுகளில் உள்ள மின்மோட்டார்கள் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும், பழுதடைந்த மின் மோட்டார்களை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

2 நாட்களில்...

இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் ரமேஷ், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்னும் 2 நாட்களில் பழுதான மின் மோட்டார்களை சீரமைத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் 2 நாட்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறிச்சென்றனர்.

மேலும் செய்திகள்