முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி யானைகளுக்கு தென்னை, கூந்தப்பனை உள்ளிட்ட பசுந்தீவனங்கள் வழங்கப்படுகிறது

முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் வளர்ப்பு யானைகளுக்கு தென்னை, கூந்தப்பனை உள்ளிட்ட பசுந்தீவனங்கள் வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Update: 2017-02-28 22:30 GMT
பசுந்தீவன தட்டுப்பாடு

நீலகிரி மாவட்டத்தில் நீலகிரி வடக்கு, தெற்கு, கூடலூர் மற்றும் முதுமுலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் சுமார் 60 சதவீதம் அளவிற்கு வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள், மான்கள், காட்டு எருமைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தாவர உண்ணிகளும், புலி, சிறுத்தைப்புலி, செந்நாய் உள்ளிட்ட ஊன் உண்ணிகளும் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் தேயிலை செடிகள், காய்கறி செடிகள், புற்கள், சிறு தாவரங்கள் வேகமாக கருகி வருகின்றன. மேலும் வனப்பகுதிகள் பசுமை இழந்து வருவதால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

வளர்ப்பு யானைகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் ஒரு நாளைக்கு 250 கிலோ பசுந்தழைகளை தின்னக்கூடிய காட்டு யானைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதியினுள் மேய்சலுக்கு சென்று அங்குள்ள சிறு புற்களையும், செடி, கொடிகளை சாப்பிடுகின்றன. இந்த தீவனமானது வளர்ப்பு யானைகளுக்கு போதுமானதாக இல்லை.

எனவே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 24 வளர்ப்பு யானைகளுக்கு தென்னை, கூந்தப்பனை போன்ற பசுந்தீவனங்களை வழங்க புலிகள் காப்பக நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

பசுந்தீவனங்கள் வழங்கப்படுகிறது

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சீகூர், சிங்காரா வனப்பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, கூடலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்தும், கேரளா மாநிலத்தில் இருந்தும் தென்னை, கூந்தப்பனை உள்ளிட்ட பசுந்தீவனங்கள் கொண்டு வரப்பட்டு பேம்பெக்ஸ், ஈட்டி மரகேம்ப், பைசன் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 24 வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்படுகிறது.

இவற்றை வளர்ப்பு யானைகள் அதிக ஆர்வத்துடன் சாப்பிடுகின்றன. கோடைகாலம் முடியும் வரை இந்த பசுந்தீவனங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்