குடிநீர் வழங்காததை கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீர் வழங்காததை கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-02-28 23:00 GMT
குடிநீர் தட்டுப்பாடு

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சி மலை மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியையும் விட்டு வைக்கவில்லை. குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்கள் வறண்டு விட்டன. இதனால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நகராட்சியின் 4–வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒருமாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் கடந்த வாரம் லேம்ஸ்ராக் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அப்பகுதி மக்களுக்கு இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நகராட்சி அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குன்னூர் நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நகராட்சி கமி‌ஷனர் முகமது சிராஜ், என்ஜினீயர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், தற்போது மழை இல்லாததால் குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் குறைவாக உள்ளது.

இந்த தண்ணீரை சுழற்சி முறையில் எல்லா வார்டுகளுக்கும் வழங்கி வருகிறோம். அம்பேத்கர் நகர் மக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இதனை ஏற்ற பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்