கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி பிளஸ்–2 மாணவர்கள் 2 பேர் பலி திருப்பத்தூரை சேர்ந்தவர்கள்

கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி திருப்பத்தூரை சேர்ந்த பிளஸ்–2 மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.;

Update: 2017-02-28 23:15 GMT

கிருஷ்ணகிரி,

பிளஸ்–2 மாணவர்கள்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் சித்திக் (வயது 17). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜப்பார். இவரது மகன் கபார்(17). சித்திக்கும், கபாரும் திருப்பத்தூரில் உள்ள உஸ்மானியா பள்ளியில் பிளஸ் –2 படித்து வந்தனர். நேற்று பள்ளியில் பிரிவுபசார விழா நடந்தது.

இதில் பங்கேற்ற 2 பேரும் தனது நண்பர்கள் யூசுப், வாஜித் ஆகியோருடன் நேற்று மதியம் 3 மணிக்கு கிருஷ்ணகிரி அணைக்கு வந்தனர். சித்திக், கபார் உள்பட நண்பர்கள் 4 பேரும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் சின்னமதகு அருகில் நடந்து சென்றனர்.

சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக சித்திக், கபார் ஆகிய 2 பேரும் தவறி தண்ணீரில் விழுந்தனர். நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கினார்கள். அவர்களை காப்பாற்ற நண்பர்கள் முயன்றனர். எனினும் சித்திக்கும், கபாரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். மேலும் தீயணைப்புபடையினரும் அங்கு விரைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து மீன் பிடிப்பவர்கள் உதவியுடன் 2 மாணவர்களின் உடலை தேடும் பணி நடந்தது. சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரி அணையில் மூழ்கி பிளஸ்–2 மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்