காரில் செல்லும் போது 18 பவுன் தங்க நகையை தவற விட்ட பெண் நாடக நடிகர் கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே காரில் செல்லும் போது பெண் ஒருவர் தவறவிட்ட 18 பவுன் நகைகள் அடங்கிய பையை கண்டெடுத்த நாடக நடிகர் அதை போலீசில் ஒப்படைத்தார்.

Update: 2017-02-28 23:00 GMT

ராமநாதபுரம்,

ஆசிரியர்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள விசவனூரைச் சேர்ந்தவர் முருகன்(வயது 35). தேவகோட்டையை அடுத்த ஆராவயல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி கயல்விழி(31). முருகன் குடும்பத்துடன் தேவகோட்டை குருதாவூரணி குலக்கால்தெரு பகுதியில் குடியிருந்து வருகிறார்.

இந்தநிலையில் முருகன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சிவராத்திரி திருவிழாவிற்காக இளையான்குடியை அடுத்த திருவள்ளுரில் உள்ள தங்கையா கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தார். சாமி கும்பிட்டதும், முருகன் மோட்டார் சைக்கிளில் தேவகோட்டைக்கு சென்று விட்டாராம். கயல்விழி மற்றும் குடும்பத்தினர் ஒரு காரில் தேவகோட்டைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

நகை பை கீழே விழுந்தது

கயல்விழி தனது துணிகள் மற்றும் 18 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஒரு பையில் வைத்து அதை காரின் மேல்பகுதியில் கட்டி வைத்திருந்தாராம். ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராதானூர் பகுதியில் ஒரு வளைவில் கார் திரும்பியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக காரின் மேல் பகுதியில் துணிகள் மற்றும் நகைகள் வைத்திருந்த பை கீழே விழுந்தது.

இதனை கவனிக்காமல் காரில் இருந்தவர்கள் சென்றுவிட்டனர். சிறிதுநேரம் கழித்து அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த செட்டியேந்தல் பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரின் மகன் நாடக நடிகர் அருள்ராஜ் என்ற சிங்கதுரை(59) என்பவர் பை ஒன்று கீழே கிடப்பதை பார்த்துள்ளார். பின்னர் அதை எடுத்து பார்த்த போது, அதில் துணிகள் மற்றும் நகைகள் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர், தனிப்பிரிவு காவலர் பாண்டிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பாராட்டு

இதன்பின்னர் அவர்கள் இருவரும், ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் நகைகள் அடங்கிய பையை ஒப்படைத்தனர். இதற்கிடையே வீட்டுக்கு சென்றதும் நகைகளுடன் கூடிய பை காணாமல் போனதை அறிந்து கயல்விழி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், தாங்கள் காரில் வந்த வழியை நோக்கி தேடிக்கொண்டே வந்தனர்.

ராதானூர் பகுதியில் அவர்கள் வந்தபோது, அந்த பகுதியில் நகைகளுடன் பை ஒன்று கிடந்ததையும் அதை அருள்ராஜ் கண்டெடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததையும் அந்த பகுதியினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கயல்விழி மற்றும் அவரது குடும்பத்தினர் போலீஸ் நிலையத்திற்கு சென்று நகைகளுடன் கூடிய பையை தவற விட்டதை தெரிவித்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, நகைகளுடன் கூடிய பையை கயல்விழி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். ரோட்டில் கிடந்த பையில் நகைகளை கண்ட நாடக நடிகர் அருள்ராஜ், அதனை வைத்துக்கொள்ள பேராசைப்படாமல் போலீசாரிடம் ஒப்படைத்து நேர்மையாக நடந்து கொண்டதற்காக அவரை போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் மற்றும் போலீசார் பாராட்டினர்.

மேலும் செய்திகள்