கலசபாக்கம் அருகே சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை திருவண்ணாமலை மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு

கலசபாக்கம் அருகே சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

Update: 2017-02-28 23:00 GMT

திருவண்ணாமலை,

சிறுமி கடத்தி கற்பழிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா அருணகிரிமங்கலம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 25), கூலித்தொழிலாளி. கடந்த 13–2–2010–ம் ஆண்டு அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் நின்று கொண்டிருந்த 9 வயது சிறுமியை ரமேஷ் வாயை பொத்தி கடத்தி சென்று கரும்பு தோட்டத்துக்குள் வைத்து கற்பழித்தார். பின்னர் அங்கிருந்து ரமேஷ் தப்பியோடினார்.

நடந்த சம்பவங்களை சிறுமி தனது பெற்றோரிடம் கதறி அழுதபடி கூறினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கடலாடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ரமேஷை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்கு திருவண்ணாமலை மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மகளிர் விரைவு கோர்ட்டு நீதிபதி மேரி அன்செலம், சிறுமியை கடத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், கற்பழித்தற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் ரமேஷ் செலுத்த வேண்டும். மேலும் சிறைதண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதம் கட்ட தவறினால் கூடுதல் ஒரு ஆண்டு சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

தொடர்ந்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரமேஷை போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். சிறுமியை கடத்தி கற்பழித்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்