வேலூர் அருகே பொய்கை வாரச்சந்தை ரூ.80 லட்சத்திற்கு ஏலம் கூடுதல் தொகை வசூலிக்கப்படும் என்ற தகவலால் வியாபாரிகள் அச்சம்

வேலூர் அருகே உள்ள பொய்கை வாரச்சந்தை ஏலத்தில் 200–க்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர்.

Update: 2017-02-28 22:45 GMT

அணைக்கட்டு,

மாட்டு சந்தை

வேலூர் அருகே உள்ள பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறும். முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியுள்ளவர்களுக்கு இந்த சந்தை பயனுள்ளதாக விளங்குகிறது. ஏனெனில் இங்குகால்நடைகள், கோழி ஆகியவையும் விற்கப்படுகிறது.

வேலூர், திருவண்ணாமலை உள்பட ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் காளைகள், பல்வேறு இன கறவை மாடுகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் பொய்கை சந்தையை மாட்டுச்சந்தை என்றே அழைப்பர்.

வாரம் ஒருநாள் நடக்கும் இந்த சந்தையில் ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது. மாடுகள் விற்பனை மட்டுமே ரூ.1 கோடியை எட்டும். சந்தைக்கு முந்தைய நாள் இரவிலேயே வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டு வந்து இறக்கப்பட்டுவிடும்.

சந்தை ஏலம்

மாடுகளின் பல்லை பிடித்தும், கன்று ஈன்றதை வைத்தும், நாளொன்றுக்கு எவ்வளவு லிட்டர் பால் கறக்கும் என்பதை கேட்டும் இடைத்தரகர்கள் மூலம் விலை நிர்ணயித்து மாடுகள் உடனடியாக விற்கப்படும். இதில் கால்நடைகளை விற்க வருபவர்களுக்கு இணையாக இடைத்தரகர்களும் அதிக லாபம் ஈட்டுகின்றனர். அதிகாலை தொடங்கும் இந்த சந்தை மதியம் வரை விறுவிறுப்பாக நடைபெறும். இடை இடையே மற்ற வியாபாரிகள் கடை விரித்து தங்களது பொருட்களை விற்பனை செய்கிறார்கள். மேலும் காய்கறிகள், விதைகளும் விற்கப்படுவதால் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளையும் வாங்குகின்றனர்.

அதிக லாபம் கிடைப்பதால் பொய்கை சந்தையை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. ஏலத்தில் அரசியல் குறுக்கீடும் உள்ளது.

பல்வேறு கட்சி பிரமுகர்கள் ஏலத்தில் பங்கேற்று கடும் போட்டியை ஏற்படுத்துவார்கள். வழக்கம் போல், இந்தாண்டுக்கான ஏலம் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது.

நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் தலைமை தாங்கினர். இதில் பொய்கை ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட 200–க்கும் மேற்பட்டோர் பொய்கை சந்தையை ஏலம் எடுப்பதில் மும்முரம் காட்டினர்.

ரூ.80 லட்சம் ஏலம்

இறுதியில் ரூ.80 லட்சத்துக்கு பொய்கை சந்தையை பா.ம.க. பிரமுகர் லோகநாதன் என்கிற மலைக்கள்ளன் ஏலம் எடுத்தார். கடந்தாண்டு ரூ.46 லட்சம் மட்டுமே ஏலம் போனது. இதன் மூலம் இந்த ஆண்டு ரூ.34 லட்சத்துக்கு கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்டது.

ஏலம் எடுத்தவர், வியாபாரிகளிடம் அதிக தொகை வசூலிக்க கூடாது. அடிப்படை வசதி செய்து தரவேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளை அதிகாரிகள் விதித்தனர்.

பொய்கை சந்தை ஏலம் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். வாரந்தோறும் கடைக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படும் நிலை ஏற்படுமோ என்று அச்சத்தில் வியாபாரிகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்