7,675 பேருக்கு சூரிய ஒளி மின்சக்தியுடன் பசுமை வீடுகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 7,675 பேர் சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் நடராஜன் கூறியதாவது:–
தமிழ்நாடு அரசு ஊரகப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிராமப்புறங்களின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நகர்ப்புறங்களுக்கு இணையாக ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாடு, முதல்–அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு, மழைநீர் சேகரிப்பு, ஊரக உட்கட்டமைப்பு சாலைகள் மேம்பாடு, ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு, தனிநபர் இல்லக்கழிப்பறைகள் அமைத்தல், சுகாதார வளாகங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் எண்ணற்ற வளர்ச்சித்திட்டப்பணிகளை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் கடந்த 2013–14–ம் நிதியாண்டில் ஒரு வீட்டின் அலகு தொகை ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த திட்டமானது ஊரக வீட்டு வசதி திட்டத்தில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தனித்தன்மை வாய்ந்த திட்டமாகும். இந்த திட்டத்தின்கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களில் 2011–12–ம் ஆண்டில் 1,506 பயனாளிகளும், 2012–15–ம் ஆண்டில் 4,488 பயனாளிகளும், 2015–16–ம் ஆண்டில் 1,605 பயனாளிகளும் என மொத்தம் ரூ.124.48 கோடி மதிப்பீட்டில் 7,599 பயனாளிகளுக்கு சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் பெற்று பயனடைந்துள்ளனர்.
கைத்தறி நெசவாளர்கள்இதுதவிர கைத்தறி நெசவாளர்களுக்கு சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பரமக்குடி, கடலாடி, நயினார்கோவில் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் கைத்தறி நெசவாளர்களில் 2013–14–ம் ஆண்டில் 55 பயனாளிகளுக்கும், 2014–15–ம் நிதியாண்டில் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 21 கைத்தறி நெசவாளர் பயனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.2.03 கோடி மதிப்பில் 76 கைத்தறி நெசவாளர்களுக்கு சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கப்பட்டுஉள்ளன. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.