மீத்தேன் திட்டத்தை தடை செய்யாவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்

மீத்தேன் திட்டத்தை தடை செய்யாவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறினார்.

Update: 2017-02-22 22:45 GMT
துறையூர்,

முப்பெரும்விழா

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள டாக்டர் ராமசாமி திடலில் சமூகநீதித்திருவிழா மற்றும் புழல்கோட்டை அரசி குரும்பரினத்தாய் குப்பி ஒலிப்பேழை வெளியீட்டு விழா, சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழாஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மக்கள் சமூக நீதி பேரவை மாநில அவைத்தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். மாநில அவைத்துணைத் தலைவர் அபிராமி சுந்தரி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்குவது இல்லை. பூர்வகுடி மக்கள் தெடர்ந்து ஒதுக்கப்படுகிறார்கள். இதுமட்டும் இன்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும். கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சமஉரிமை வழங்கவேண்டும். தற்போது தமிழகத்தை மத்திய அரசு பெரிதும் வஞ்சிக்கிறது மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்து தமிழக மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத்திட்டத்தால் புதுக்கோட்டை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த திட்டத்தை தடைசெய்யாமல் நடைமுறை படுத்தி வந்தால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

விருது

விழாவில் மக்கள் சமூக நீதி பேரவை மகளிரணித்தலைவி மணிமேகலை தலைமை தாங்கினார். கர்நாடகாவின் முன்னாள் தலைமைப்பொறியாளர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சமூகநீதி மருத்துவச்சுடர் விருது டாக்டர் சேதுராமனுக்கும், சமூகநீதி போராளிச்சுடர் விருதை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கும், சமூக நிதி மனித உரிமை சுடர் விருது தேசிய மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பெங்களுரு மதுவுக்கும் வழங்கப்பட்டது. இதுமட்டும் இன்றி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பூர்வ குடிமக்களின் பாரம்பரிய பூஜையான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தலையில் தேங்காய் உடைத்து கொண்டார்கள். இறுதியில் மக்கள் சமூகநீதி பேரவை மாநில அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்